viii பின், அகோர முனிவர் விசுவநாதப் பெருமானைக் கண்களாரக் கண்டுகளிக்கும் வேணவாவுடையவராய்க் காசி யாத்திரைக்குப் புறப்பட்டகாலை, வைத்தியநாதரும் உடன் போதரும் பெருவிருப்பினராக, அவரையும் அழைத்துச் சென்றார். சைவத் திருப்பதிகள் பலவற்றையும் கண்டு வணங்கிப்போந்த இருவரும் திருவண்ணாமலையினையடைந்து ஒரு திருமடத்தில் தங்கினர். அங்கு ஆன்மார்த்த பூசை செய்வதற்குச் சென்ற ஆசிரியர் பெருமான் அதனைமுடித்து மீண்டு வந்த அளவில், யோக நிலையில் தம்மை மறந்து இறையருளில் திளைத்திருந்த மாணாக்கரைக்கண்டு, அவரது பரிபக்குவத்தை வியந்து, ஆன்மிகத்துறையில் அவரடைந்த ஏற்றத்தை நினைந்து, அவரடி பணிந்து அவர் சீடராயினார். இருவருக்கும் இடையே இருந்த தொடர்பு வேறு பட்டதனால், வைத்தியநாதரைத் தாம் காசி நகருக்கு அழைத்துச் சேறல் முறையன்று என்று கொண்ட முனிவர், அவரை ஊர் போகவிடுத்துத் தாம் காசிக்கும் புறப்பட்டார். பின், தம்மூருக்கு மீண்ட வைத்தியநாதருக்குத் தங்கம் என்ற அம்மையார் வாழ்க்கைத் துணைவியாராக முறைப்படி மணம் செய்விக்கப்பட்டார். இல்லறச்சாகாடு இனிதின் செல்வதற்குப் பொருள் வேண்டுமாதலின், கற்றோரைப் போற்றிப் பயன் கொள்ளும் புரவலரை நாடிச் செல்லல் வேண்டும் என்ற நிலை வைத்தியநாதருக்கும் ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் நோக்கிப் புறப்பட்ட வைத்தியநாதர், திருமலைநாயக்கரின் செயலருள் ஒருவராய்க் கயத்தாற்றில் வாழ்ந்து வந்தவரும், செல்வமும் கல்வியும் பண்பும் ஒருங்கே அமையப்பெற்றவருமான திருவேங்கடநாத ஐயர் என்பாரை அடைந்தார். அவர் |