உயிரீற்றுப் புணரியல்

பெரும்பான்மையும் நன்னூலை ஒட்டியே நூல் வரையப் புகுந்த இவர், தொல்காப்பியத்து எழுத்துப் படலத்தின் கண்ணவாகிய புணரியல் தொகைமரபு என்ற ஓத்துக்களில் காணப்படும் செய்திகள் பொதுவாகவும் தொகுப்பாகவும் அமைதலின், அவற்றை உயிரீற்றுப் புணரியலின் எடுத்துக்கோடற்கண் உயிரீறு பற்றிச் சிறப்பாக விதந்து கூறுமுன் கூறுதல் வேண்டும் என்ற வரையறை செய்துகொண்டு, அவற்றை உயிரீறு மெய்யீறு என ஈறுபற்றி விதவாது, பொதுச்செய்தி தொகுப்புச்செய்தி என்ற தொடர்பு ஒன்றேகொண்டு இவ்வியலின் எடுத்துக்கோடற்கண் நூற்பாக்கொண்டும் உரை வரைந்தும் விளக்குகின்றார். நச்சினார்க்கினியர் தம் எழுத்ததிகார உரையில் மிகத்தோய்ந்த பேரறிஞராகிய நம் ஆசிரியர் அவர் மிகைச் சொற்களுக்கு வரைந்த விளக்கங்களையும் எடுத்துக்காட்டுக்களையும் பெருமதிப்புடன் ஏற்று ஆட்டாண்டு நூற்பா வுரையுள்பெய்து செல்லுந்திறன், இவர்தம் நினைவாற்றலையும் கூர்த்த மதியினையும் ஒருதலையாக நுவல்வதாகும்.

தொல்காப்பியனார் ஈறுதோறும் விதந்து கூறும் பல செய்திகளையும் நன்னூலார்போலப் பொதுப்படத் தொகுத்துக் கூறி விளக்கப்புக்க இவர், தொல்காப்பியத்தில் நச்சினார்க்கினியர்தம் எழுத்துப்படலவுரைச் செய்திகள் பலவற்றையும் தாம் கொண்டுள்ள நூற்பாக்களின் உரையில் இயைபு காட்டி ஏற்றபெற்றி அடக்கிச்செல்லும் திறன் விம்மிதம் பயப்பதாகும்.

நன்னூலார்போலவே புணர்ச்சியிலக்கணம் இன்னது என்பதை அவர்தம் நூற்பாவினைக் கொண்டே நுவலும் இவர், அல்வழி வேற்றுமைகளை விளக்குமிடத்து அல்