xxxvi

வருமொழியொடு புணரும் புணர்ச்சியும் இடம் பெறுகின்றன. ஈம்கம் உரும் பற்றிய நன்னூல் நூற்பாவினை எழுதி உரையில் பல அரிய புணர்ச்சிகளை விளக்குகிறார்.

யரழக்களின் புணர்ச்சியை நன்னூலை ஒட்டி நூற்பா யாத்து உரைத்து, ஆட்டாண்டுத் தொல்காப்பிய நூற்பாக்களின் உரையில் காணப்படும் செய்திகள் பலவற்றையும் இயைத்து உணர்த்துகிறார், தமிழ் தாழ் கீழ் என்ற ழகரஈற்றுச் சொற்களும், அவற்றை ஒட்டியனவும் பின் விளக்கப்பெறுகின்றன. தொல்காப்பியனார் ஏழ் என்ற எண்ணுப் பெயரை ழகர ஈற்றுச் சொல்லாகவே கொண்டு பல நூற்பாக்களில் ஏழ் என்பதன் புணர்ச்சியாகச் சொற்றவற்றை, ஏழ் என்பதனை ஆறு என்பதனோடு மாட்டெறிதல் வாயிலாக விளக்குகிறார்.

ல ள என்பனவற்றின் புணர்ச்சிவிதி நன்னூலை ஒட்டியதேனும், உரையில் தொல்காப்பிய உரைக் கருத்துக்கள் விடுபட்டில. ‘குறில்வழி ல ள’, ‘குறில் செறியா ல ள’ பற்றிய நன்னூல் விதிகள் அடுத்து இடம் பெறுகின்றன. உரையில் பல அரிய புணர்ச்சிச் செய்திகள் உரைக்கப்படுகின்றன. நெல், செல், கொல், சொல் என்பனவற்றின் புணர்ச்சி விதிகளும், அவைபற்றிய ஏனைய செய்திகளும் அடுத்து விளக்கப்படுகின்றன.

இல் என்ற சொல்லின் புணர்ச்சியை நன்னூலை ஒட்டிக் கூறும் இவ்வாசிரியர், உண்டு என்பதன்புணர்ச்சி விதி முன்னர்க்கூறாது அதனைப் புறனடையால் விளக்குகிறார். இந்நூற்பாவிற்கு உரையாசிரியரைத் தழுவி உரை எழுதும் இவர், இல்லை என்ற இயற்கைச்சொல் ஒன்று இல்லை என்ற கருத்தினைத் தக்க சான்று காட்டி மறுக்கும் திறன் சால அழகிது. அடுத்து, ளகர ஈற்றனவாகிய புள் வள் என்பனவற்றின் புணர்ச்சி விதியினை அமைத்துள்ளார்.