அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயர் ஆய்வுத்துறை
திராவிட மொழி
தொடர்பாக பல துறைகளில் ஆராய்ந்து வருகிறது.
அவற்றுள் ஒப்பிலக்கணம், ஒப்புமை மொழியியல்
(Contrastive
Linguistics) கிளை மொழிகள், சமூக மொழியியல், தென்னகப் பழங்குடி
மக்களின் மொழிகள், திராவிட மொழிகளைப் பிற மொழியினருக்குக்
கற்பிக்கும் மொழி ஆய்வு, தமிழ்மொழி வரலாற்று இலக்கணம், திராவிட
மொழி மரபு இலக்கணங்களின் மதிப்பீடு ஆகிய துறைகள் சிறப்பாகக்
குறிப்பிடத்தக்கன. அவற்றுள் இலக்கண மதிப்பீட்டு ஆய்வில் இத்துறை
பலவேறு பணிகளைப் பலவேறு நிலைகளில் புரிந்து வருகிறது. பழைய
இலக்கணங்களைத் தற்கால மொழியியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து
அவற்றில் மறைந்து கிடக்கும் சிறந்த மொழியியல் கோட்பாடுகளை வெளிக்
கொணர்வதன் மூலம் மொழியியல் வரலாற்றில்
(History of Linguistics)
அவற்றிற்கு இடமளிக்க வழிவகை செய்வதும் இன்றைய தலைமுறையினர்
பழைய இலக்கணங்களின் உண்மையான சிறப்பையும் குறை நிறைகளையும்
உணர்ந்து இலக்கண ஆராய்ச்சியிலும் மொழியியல் ஆராய்ச்சியிலும் மொழி
வரலாற்று ஆராய்ச்சியிலும் ஈடுபாடு கொள்ள நல்ல வாய்ப்பினை அளிப்பதும்
இலக்கண மதிப்பீட்டுத் துறையில் இதுவரை செய்த பணிகளில்
குறிப்பிடத்தக்கனவாகும். இலக்கண நூல்களைப் பல்வேறு ஆராய்ச்சிப்
பட்டங்களுக்கு எடுப்பதுடன் அவற்றை நூல் வடிவில் வெளியிட்டு
மொழியியல் மாணவர்களுக்கும் பிறருக்கும் பயன்படுமாறு செய்வதும் இதன்
பணியாகும். நச்சினார்க்கினியர் எழுத்ததிகார உரை ஆராயப்பெற்று அதன்
அடிப்படையில்
Naccinarkkiniyar's conception of Phonology என்ற
நூலையும், நன்னூல் எழுத்ததிகாரத்தைத் தற்கால மொழியியல்
கண்ணோட்டத்தோடு ஆராய்ந்த நிலையில்
A modern evaluation of
Nannu:l - eluttatika:ram என்ற நூலையும் வெளியிட்டதும் தமிழ்
இலக்கண வரலாற்றை விரிவாக எழுதும் முயற்சியில் வேற்றுமை பற்றி
எல்லா இலக்கண ஆசிரியர்களின் கருத்தையும் ஆராய்ந்து
'A History
of Tamil Grammars with reference to Declension' என்ற
ஆராய்ச்சிக் கட்டுரையைத் தயாரித்துள்ளதும் இந்நிலையில் குறிப்பிடத்தக்கன.
திராவிட இலக்கண நூல்களைப்பற்றி ஏழு கருத்தரங்குகள் நடத்தி
அவற்றை நூல்களாக வெளியிடும் பணியையும் இத்துறை மேற்கொண்டுள்ளது.
1970-இல் நடந்த கருத்தரங்கில் தொல்காப்பியம் மட்டும் முழுமையாக
ஆராய்ந்து அக்கட்டுரைகளைத்
தொல்காப்பிய மொழியியல் என்ற
நூலாகவும் 1973-இல் நடைபெற்ற இரண்டாவது தமிழ் இலக்கணக்
கொள்கைகள் கருத்தரங்கில் ஆராயப் பெற்ற கட்டுரைகளை
இலக்கண
ஆய்வுக் கட்டுரைகள்-1 என்ற நூலாகவும் வெளியிட்டுள்ளது இத்துறை.
இத்துறை ஆசிரியர்கள் பலரும் இலக்கணத்தின் பலவேறு கூறுகளைத்
தொடர்ந்து ஆய்ந்து வெளியிட்டு வருவதும் தொல்காப்பியத்திற்கு தற்கால
மொழியியல் கண்ணோட்டத்தில் தெளிவுரை ஒன்று எழுதி வருவதும் இங்கு
குறிப்பிடத்தக்கன.
இந்நிலையில் இத்துறையைச் சார்ந்த செ. வை. சண்முகம் 1972-73
கல்வியாண்டில் உயர் ஆய்வுக்காக ரெடிங் பல்கலைக்கழகம் (இங்கிலாந்து)
சென்றபோது லண்டனில் உள்ள பிரிட்டீஷ் பொருட்காட்சி சாலைக் கீழைக்
கலைத்துறை நூல் நிலையத்தில் ஐந்திலக்கண நூலாகிய
சுவாமிநாதம்
முழுமையும் கையெழுத்துப் பிரதியாக இருப்பது அறிந்து அதனைக் கற்று
மகிழ்ந்ததுடன் புகைப்பட பிரதி ஒன்றுடன் தாய் நாடு திரும்பினார். தாய்
நாடு வந்த அவர் அந் நூலுக்கு நல்லதொரு உரை ஒன்றை வகுத்து,
பதிப்பித்த நிலையில் அதனை வெளியிடுவதில் இத் துறை பெருமையும்
மகிழ்வும் கொள்ளுகிறது. மேலும் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும்
கிடைக்கும் சுவாமிநாதத்தின் சில பகுதிகளையும் அவர் திரட்டிய நிலையில்
அதனைத் தனியொரு நூலாகவும் வெளியிட உள்ளது இத்துறை. இந்நிலையில்
அவருடைய ஆக்கப் பணிக்குத் தமிழ் உலகம் நல்லதொரு வரவேற்பையும்
வாழ்த்தையும் அளிக்கும் என நம்புகிறேன்.
|