முகவுரை

"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கும் என்னம்மை -- தூய 
உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தி னுள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்."

--கம்ப நாடர்

'வீரசோழியம்' தமிழ் மொழிக்குரிய ஐந்திலக்கணங்களையும் சுருக்கிக் கூறும் நூல்களில் முதலாவதாகும்.

இந்நூலை இயற்றியவர் 'பொன்பற்றி' என்னும் ஊரிலிருந்து சிற்றரசு புரிந்த 'புத்த மித்திரர்' என்பவர். இவர் புத்த மதத்தினர். இவற்றை இந்நூற் பாயிரத்தின்கண்,

'மிக்கவன், போதியின் மேதக் கிருந்தவன், மெய்த்தவத்தால்
தொக்கவன், யார்க்குந் தொடரவொண் ணாதவன், தூயனெனத்
தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழுரைக்கப்
புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே.'

என வரும் முதற்செய்யுளால் அறியலாம். இந்நூலை இயற்றுவித்தவன் வீரராசேந்திர சோழ மன்னவனாவன். அதனை இந்நூலுக்கு 'வீரசோழியம்' எனப் பெயர் அமைக்கப்பட்டிருப்பதனாலும், இந்நூற்பாயிரத்தின் மூன்றாஞ் செய்யுளில்,

'தேமே வியதொங்கற் றேர்வீர சோழன் றிருப்பெயரால்
பூமே லுரைப்பன் '

எனவும், இந்நூலின் ஏழாஞ் செய்யுளில்,

'மேவிய வெண்குடைச் செம்பியன் வீரரா சேந்திரன்றன்
நாவியல் செந்தமிழ் '

எனவும் வருவனவற்றால் அறிதலாம். இந்நூலுக்கு உரையியற்றியவர் 'பெருந்தேவனார்' என்பவர். அதனை இந்நூலின் ஈற்றிலுள்ள 'தடமார்' என்னுஞ் செய்யுளில்,

'படிவீர சோழியக் காரிகை நூற்றெண் பஃதொடொன்றின்
திடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன் செகம்பழிச்சக்
கடனாக வேநவின் றான்றமிழ் காதலிற் கற்பவர்க்கே.'