தமிழ்க்கல்லூரியின் வெள்ளிவிழா நினைவாக 1978-ஆம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டருளினார். இப்பதிப்பு வந்தபிறகுதான் இத்தகைய அருமையானதோர் தமிழிலக்கண நூல் உள்ள தென்பதை இன்றைய தமிழாய்வாளர் பெயரளவிலேனும் அறிய வாய்ப்பேற்பட்டது. |
|
இந்நூலாசிரியரின் பெயரரின் மூத்த மைந்தராகிய சுவடிக் கலைஞர் புலவர் தி.மு. சங்கரலிங்கம் அவர்கள் 1982-ம் ஆண்டு ஜுன் மாதம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மாண்புமிகு துணைவேந்தர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதினார். அதனுள் இதுவரை வெளியாகாமலிருக்கும் ஏழா மிலக்கணத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்பிக்க வேண்டு மென்று கேட்டுக்கொண்டு அப்பணியில் என்னை ஈடுபடுத்தலாம் எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். |
இக்கடிதத்தினைக் கண்ட முன்னாள் துணைவேந்தர் முதுமுனைவர். வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் என்பால் கையெழுத்துப்படியாக உள்ள அறுவகையிலக்கணம். ஏழாமிலக்கணம் ஆகிய இரண்டையும் கவனமாகப் பரிசீலித்தார். அறுவகை இலக்கணத்திற்கும் உரை இல்லாமலிருப்பதால் ஏழாமிலக்கணத்திற்குமுன் இதனைக் குறிப்புரையோடு பதிப்பிக்க விரும்பினார். நான் இந்நூல்களோடு முன்பே பழக்கப்பட்டவன் என்பதாலும் மடாலயத்தில் மாணவர்களுக்கு இவற்றைப் பாடங் கூறியவன் என்பதாலும் இவ்வுரைப் பதிப்புப் பணியை என்பால் ஒப்படைத்தார். மேலும் நூலாசிரியராகிய சுவாமிகளின் கைப்பட எழுதப் பெற்ற ஓலைச்சுவடியைத்தான் மூலப்படியாகக் கொள்ளவேண்டுமென்றும் மற்ற பதிப்புகளையோ அல்லது என் கையெழுத்துப்படியையோ சார்ந்திருக்கலாகாது எனவும் ஆணையிட்டார். அவ்வாணையின் வண்ணம் திருவாமாத்தூர்க் கௌமார மடாலயத்திலிருந்து அறுவகையிலக்கணம், ஏழாமிலக்கணம் ஆகிய இருசுவடிகளும் 1982-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்னால் பெற்று வரப்பெற்றன. |