தொடக்கம்

பெரும்பாண் ஆற்றுப்படை

(தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது)

பாணனது யாழின் வருணனை

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி,
பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி
காய் சினம் திருகிய கடுந் திறல் வேனில்,
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்றிடை வகுத்ததன் 5
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை;
பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக்
கரு இருந்தன்ன, கண்கூடு செறி துளை;
உருக்கியன்ன, பொருத்துறு போர்வை;
சுனை வறந்தன்ன, இருள் தூங்கு வறு வாய்; 10
பிறை பிறந்தன்ன, பின்ஏந்து கவைக் கடை;
நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக்
குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின்;
மணி வார்ந்தன்ன, மா இரு மருப்பின்;
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் 15
தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ,


பாணனது வறுமை


வெந் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில், தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போல, 20
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண!


பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்து உரை த்தல்


பெரு வறம் கூர்ந்த கானம் கல்லெனக்
கருவி வானம் துளி சொரிந்தாங்கு,
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு 25
வழங்கத் தவாஅப் பெரு வளன் எய்தி,
வால் உளைப் புரவியொடு வயக் களிறு முகந்துகொண்டு,
யாம் அவணின்றும் வருதும்-


திரையனது சிறப்பை அறிவித்தல்


நீயிரும்,
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந் நீர்த் 30
திரை தரு மரபின், உரவோன் உம்பல்,
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
இலங்கு நீர்ப் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன, வசை நீங்கு சிறப்பின், 35
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்,
பல் வேல் திரையற் படர்குவிர் ஆயின்
கேள், அவன் நிலையே; கெடுக நின் அவலம்!


திரையனது ஆணை


அத்தம் செல்வோர் அலறத் தாக்கி,
கைப் பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கைக் 40
கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன் புலம்;
உருமும் உரறாது; அரவும் தப்பா;
காட்டு மாவும் உறுகண் செய்யா;
வேட்டு, ஆங்கு, அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி,
சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்! 45


உப்பு வாணிகர் செல்லும் நெடிய வழி


கொழுஞ் சூட்டு அருந்திய, திருந்து நிலை ஆரத்து,
முழவின் அன்ன முழுமர உருளி,
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக் கை நோன் பார்,
மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன,
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடம் 50
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேக்கும் கூடுடைப் புதவின்,
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி,
நாடக மகளிர் ஆடு களத்து எடுத்த 55
விசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்து,
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப
கோட்டுஇணர் வேம்பின் ஏட்டுஇலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணி தோள், 60
முடலை யாக்கை, முழு வலி மாக்கள்
சிறு துளைக் கொடு நுகம் நெறிபட நிரைத்த
பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப,
சில் பத உணவின் கொள்ளை சாற்றி,
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி 65


வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டு வழி


எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும், திருந்து தொடை நோன் தாள்
அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின், 70
விரவு வரிக் கச்சின், வெண் கை ஒள் வாள்,
வரை ஊர் பாம்பின், பூண்டு புடை தூங்க,
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை,
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த் தோள்,
கடம்பு அமர் நெடு வேள் அன்ன, மீளி, 75
உடம்பிடித் தடக் கை ஓடா வம்பலர்,
தடவு நிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
சிறு சுளைப் பெரும் பழம் கடுப்ப, மிரியல்
புணர்ப் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு, வழங்கும் 80
உல்குடைப் பெரு வழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின்


எயிற்றியர் குடிசை


நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசுங் காய் புடை விரிந்தன்ன
வரிப் புற அணிலொடு, கருப்பை ஆடாது, 85
யாற்று அறல் புரையும் வெரிநுடைக், கொழு மடல்,
வேல் தலை அன்ன வைந் நுதி, நெடுந் தகர்,
ஈத்து இலை வேய்ந்த எய்ப் புறக் குரம்பை


புல்லரிசி எடுத்தல்


மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி,
ஈன் பிணவு ஒழியப் போகி, நோன் காழ் 90
இரும்பு தலை யாத்த திருந்து கணை விழுக் கோல்
உளி வாய்ச் சுரையின் மிளிர மிண்டி,
இரு நிலக் கரம்பைப் படு நீறு ஆடி,
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்


எயிற்றியர் அளிக்கும் உணவு


பார்வை யாத்த பறை தாள் விளவின்
95
நீழல் முன்றில், நில உரல் பெய்து,
குறுங் காழ் உலக்கை ஓச்சி, நெடுங் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி, தொல்லை
முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி,
வாராது அட்ட, வாடு ஊன், புழுக்கல் 100
'வாடாத் தும்பை வயவர் பெருமகன்,
ஓடாத் தானை, ஒண் தொழில் கழல் கால்,
செவ் வரை நாடன், சென்னியம்' எனினே
தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ, நும்
பை தீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர். 105


பாலை நிலக் கானவர்களின் வேட்டை


மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்,
வான் மடி பொழுதில், நீர் நசைஇக் குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி,
புகழா வாகைப் பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் 110
அரை நாள் வேட்டம் அழுங்கின், பகல் நாள்,
பகுவாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி,
தொகு வாய் வேலித் தொடர் வலை மாட்டி,
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும்
நெடுஞ் செவிக் குறு முயல் போக்கு அற வளைஇ, 115
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ் சுரம் இறந்த அம்பர்


எயினரது அரணில் பெறும் பொருள்கள்


பருந்து பட,
ஒன்னாத் தெவ்வர் நடுங்க, ஓச்சி,
வைந் நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணிப் பலகையொடு நிரைஇ, முடி நாண் 120
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்;
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின்,
வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு
கடுந் துடி தூங்கும் கணைக் கால் பந்தர்,
தொடர் நாய் யாத்த துன் அருங் கடி நகர்; 125
வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை,
கொடு நுகம் தழீஇய புதவின், செந் நிலை
நெடு நுதி வயக் கழு நிரைத்த வாயில்,
கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின்,
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன, 130
சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி,
ஞமலி தந்த மனவுச் சூல் உடும்பின்
வறை கால்யாத்தது, வயின்தொறும் பெறுகுவிர்.


குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும்


யானை தாக்கினும், அரவு மேல் செலினும்,
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும், 135
சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை,
வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த,
புலிப் போத்து அன்ன, புல் அணல் காளை,
செல் நாய் அன்ன கரு வில் சுற்றமொடு,
கேளா மன்னர் கடி புலம் புக்கு, 140
நாள் ஆ தந்து, நறவு நொடை தொலைச்சி,
இல் அடு கள் இன் தோப்பி பருகி,
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி,
மடி வாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்,
சிலை நவில் எறுழ்த் தோள் ஓச்சி, வலன் வளையூஉ, 145
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண் தலை கழிந்த பின்றை


கோவலர் குடியிருப்பு


மறிய
குளகு அரை யாத்த குறுங் கால், குரம்பை,
செற்றை வாயில், செறி கழிக் கதவின்,
கற்றை வேய்ந்த கழித் தலைச் சாம்பின், 150
அதளோன் துஞ்சும் காப்பின் உதள,
நெடுந் தாம்பு தொடுத்த குறுந் தறி முன்றில்,
கொடு முகத் துருவையொடு வெள்ளை சேக்கும்
இடு முள் வேலி எருப் படு வரைப்பின்,
நள் இருள் விடியல் புள் எழப் போகி 155
புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி, நுரை தெரிந்து,
புகர் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நல் மா மேனி, 160
சிறு குழை துயல்வரும் காதின், பணைத் தோள்,
குறு நெறிக் கொண்ட கூந்தல், ஆய் மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி,
நெய் விலைக் கட்டிப் பசும் பொன் கொள்ளாள்,
எருமை, நல் ஆன், கரு நாகு, பெறூஉம் 165
மடி வாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்,
இருங் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசுந் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்.


முல்லை நிலக் கோவலரின் குழலிசை


தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி,
விழுத் தண்டு ஊன்றிய மழுத் தின் வன் கை, 170
உறிக் கா ஊர்ந்த மறுப் படு மயிர்ச் சுவல்,
மேம் பால் உரை த்த ஓரி, ஓங்கு மிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇ, காட்ட
பல் பூ மிடைந்த படலைக் கண்ணி,
ஒன்று அமர் உடுக்கை, கூழ் ஆர் இடையன் 175
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி,
அம் நுண் அவிர் புகை கமழ, கைம் முயன்று
ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழிச்
செந் தீத் தோட்ட கருந் துளைக் குழலின்
இன் தீம் பாலை முனையின், குமிழின் 180
புழற் கோட்டுத் தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும், விரல் எறி, குறிஞ்சி,
பல்கால் பறவை கிளை செத்து, ஓர்க்கும்
புல் ஆர் வியன் புலம் போகி



முல்லை நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிடைப்பன


முள் உடுத்து
எழு காடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில் 185
பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்,
களிற்றுத் தாள் புரையும் திரி மரப் பந்தர்,
குறுஞ் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்,
பருவ வானத்துப் பா மழை கடுப்பக் 190
கரு வை வேய்ந்த, கவின் குடிச் சீறூர்
நெடுங் குரல் பூளைப் பூவின் அன்ன,
குறுந் தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி,
புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன,
அவரை வான் புழுக்கு அட்டி, பயில்வுற்று, 195
இன் சுவை மூரல் பெறுகுவிர்.


மருத நிலத்தைச் சேர்ந்த முல்லைநிலம்


ஞாங்கர்க்
குடி நிறை வல்சிச் செஞ் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி,
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி, 200
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
அரி புகு பொழுதின், இரியல் போகி,
வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ, குறுங் கால்
கறை அணல் குறும்பூழ், கட்சிச் சேக்கும் 205
வன் புலம் இறந்த பின்றை


மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள்


நாற்று நடுதல்


மென் தோல்
மிதி உலைக் கொல்லன் முறி கொடிற்றன்ன
கவைத் தாள் அலவன் அளற்று அளை சிதைய,
பைஞ் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின், 210
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர்ச் செறுவில்,


நெல் விளைதற் சிறப்பு


களைஞர் தந்த கணைக் கால் நெய்தல்
கள் கமழ் புதுப் பூ முனையின், முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக் 215
கொடுங் கால் மா மலர் கொய்து கொண்டு, அவண
பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டி,
புணர் நார்ப் பெய்த புனைவு இன் கண்ணி
ஈருடை இருந் தலை ஆரச் சூடி,
பொன் காண் கட்டளை கடுப்ப, கண்பின் 220
புன் காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்,
இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல்,
கருங் கை வினைஞர் காதல் அம் சிறாஅர்
பழஞ் சோற்று அமலை முனைஇ, வரம்பில்
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் 225
அவல் எறி உலக்கைப் பாடு விறந்து, அயல
கொடு வாய்க் கிள்ளை படு பகை வெரூஉம்,
நீங்கா யாணர், வாங்கு கதிர்க் கழனி


நெல் அரிந்து கடா விடுதல்


கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன,
பைது அற விளைந்த பெருஞ் செந்நெல்லின் 230
தூம்புடைத் திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்,
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி,
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல், 235
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்
குழுமு நிலைப் போரின் முழு முதல் தொலைச்சி,
பகடு ஊர்பு இழிந்த பின்றை, துகள் தப,
வையும் துரும்பும் நீக்கி, பைது அற,
குட காற்று எறிந்த குப்பை, வட பால் 240
செம்பொன் மலையின், சிறப்பத் தோன்றும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை


மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள்


பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவிக்
கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்,
ஏணி எய்தா நீள் நெடு மார்பின், 245
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்,
குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல்,
தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்
தளர் நடை வருத்தம் வீட, அலர் முலைச் 250
செவிலி அம் பெண்டிர்த் தழீஇ, பால் ஆர்ந்து,
அமளித் துஞ்சும் அழகுடை நல் இல்;
தொல் பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேர் ஊர் மடியின், மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி 255
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்.


ஆலைகளில் கருப்பஞ் சாறும் கட்டியும் அருந்துதல்


மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்குடை யாளி தாக்கலின், பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்றாஅங்கு,
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை 260
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்,
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின்,


வலைஞர் குடியிருப்பு


வேழம் நிரைத்து, வெண் கோடு விரைஇ,
தாழை முடித்து, தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பை, பறியுடை முன்றில், 265
கொடுங் கால் புன்னைக் கோடு துமித்து இயற்றிய
பைங் காய் தூங்கும் பாய் மணல் பந்தர்,
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
புலவு நுனைப் பகழியும் சிலையும் மான,
செவ் வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் 270
மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி,
கோடை நீடினும் குறைபடல் அறியாத்
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின்


வலைஞர் குடியில் பெறும் உணவு


அவையா அரிசி அம் களித் துழவை
275
மலர் வாய்ப் பிழாவில் புலர ஆற்றி,
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை அளைஇ, தேம் பட
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி,
வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த, 280
வெந் நீர், அரியல் விரல் அலை, நறும் பிழி,
தண் மீன் சூட்டொடு, தளர்தலும் பெறுகுவிர்.


காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப் போதல்


பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்,
கோள் வல், பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ, 285
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப,
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்
நீத்துடை நெடுங் கயம் தீப் பட மலர்ந்த
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி, 290
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனந் தலை
அகல் இரு வானத்துக் குறை வில் ஏய்ப்ப,
அரக்கு இதழ்க் குவளையொடு நீலம் நீடி,
முரண் பூ மலிந்த முது நீர்ப் பொய்கை,
குறுநர் இட்ட கூம்பு விடு பல் மலர் 295
பெரு நாள் அமையத்துப் பிணையினிர் கழிமின்,


அந்தணரது உறைவிடங்களில் பெறுவன


செழுங் கன்று யாத்த சிறு தாள் பந்தர்,
பைஞ் சேறு மெழுகிய படிவ நல் நகர்,
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது,
வளை வாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் 300
மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின்
பெரு நல் வானத்து வடவயின் விளங்கும்
சிறு மீன் புரையும் கற்பின், நறு நுதல்,
வளைக் கை மகடூஉ வயின் அறிந்து அட்ட,
சுடர்க்கடை, பறவைப் பெயர்ப் படு வத்தம், 305
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசுங் காய்ப் போழொடு கறி கலந்து,
கஞ்சக நறு முறி அளைஇ, பைந் துணர்
நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின், வகைபடப் பெறுகுவிர். 310


நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு


வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇ,
புனல் ஆடு மகளிர் இட்ட பொலங் குழை
இரை தேர் மணிச் சிரல் இரை செத்து எறிந்தென,
புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடல் செல்லாது,
கேள்வி அந்தணர் அருங் கடன் இறுத்த 315
வேள்வித் தூணத்து அசைஇ, யவனர்
ஓதிம விளக்கின், உயர்மிசைக் கொண்ட,
வைகுறு மீனின், பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற்று எல்லைப் போகி


திமிலர் முதலியோர் உறையும் பட்டினம்


பால்கேழ்
வால் உளைப் புரவியொடு வட வளம் தரூஉம் 320
நாவாய் சூழ்ந்த நளி நீர்ப் படப்பை,
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்,
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்,
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்,
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா, 325
ஏழகத் தகரோடு எகினம் கொட்கும்
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்,
கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல்,
பைங் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க,
மால் வரைச் சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் 330
பீலி மஞ்ஞையின் இயலி, கால
தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர் நிலை
வான் தோய் மாடத்து, வரிப் பந்து அசைஇ,
கை புனை குறுந் தொடி தத்த, பைபய,
முத்த வார் மணல் பொற்கழங்கு ஆடும் 335
பட்டின மருங்கின் அசையின்


பட்டினத்து மக்களின் உபசரிப்பு


முட்டு இல்,
பைங் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூத் தூஉய செதுக்குடை முன்றில்,
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் 340
ஈர்ஞ் சேறு ஆடிய இரும் பல் குட்டிப்
பல் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது,
நெல் மா வல்சி தீற்றி, பல் நாள்
குழி நிறுத்து, ஓம்பிய குறுந் தாள் ஏற்றைக்
கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவிர். 345


ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத் துறை


வானம் ஊன்றிய மதலை போல,
ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி,
விண் பொர நிவந்த, வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் 350
துறை பிறக்கு ஒழியப் போகி


தோப்புக் குடிகளில் நிகழும் உபசாரம்


கறை அடிக்
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்,
வண் தோட்டுத் தெங்கின் வாடு மடல் வேய்ந்த,
மஞ்சள் முன்றில், மணம் நாறு படப்பை,
தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின் 355
தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம்,
வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்,
கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம்,
திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும், 360
தீம் பல் தாரம் முனையின், சேம்பின்
முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர்.


ஒதுக்குப் புற நாடுகளின் வளம்


பகற் பெயல்
மழை வீழ்ந்தன்ன மாத் தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் முப் புடைத் திரள் காய்,
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரச் 365
சோறு அடு குழிசி இளக, விழூஉம்
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து,
பல் மரம் நீள் இடைப் போகி, நல் நகர்,
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த,
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் 370
நாடு பல கழிந்த பின்றை


திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்


நீடு குலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு,
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்,
குறுங் கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடிப் 375
பாசிலைக் குருகின் புன் புற வரிப் பூ,
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்,
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப,
புனல் கால் கழீஇய பொழில்தொறும், திரள்கால் 380
சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன
நீலப் பைங் குடம் தொலைச்சி, நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ; சிறு கோட்டுக்
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு,
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல், 385
நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழைக் கண்,
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி;
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெருந் துறை,
செவ்வி கொள்பவரோடு அசைஇ; அவ் வயின் 390
அருந் திறல் கடவுள் வாழ்த்தி, சிறிது நும்
கருங் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின்.


கச்சி மூதூரின் சிறப்பு


காழோர் இகழ் பதம் நோக்கி, கீழ,
நெடுங் கை யானை நெய்ம் மிதி கவளம்
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில், 395
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,
திண் தேர் குழித்த குண்டு நெடுந் தெருவில்,
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்,
கடை கால்யாத்த பல் குடி கெழீஇக்
கொடையும் கோளும், வழங்குநர்த் தடுத்த 400
அடையா வாயில், மிளை சூழ் படப்பை,
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி,
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின், 405
இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக்
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக் கூறும் பலாஅப் போல,
புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ, 410
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்


இளந்திரையனின் போர் வெற்றி


அவ் வாய் வளர் பிறை சூடிச் செவ் வாய்
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப,
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப,
ஈர் ஐம்பதின்மரும், பொருது, களத்து அவிய, 415
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல,
அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து,
கச்சியோனே, கை வண் தோன்றல், 420
நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய


அரசனது முற்றச் சிறப்பு


அளியும் தெறலும் எளியஆகலின்,
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ் பட,
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப,
நட்புக் கொளல் வேண்டி, நயந்திசினோரும், 425
துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும்,
கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு,
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செவ் வரை,
வெண் திரை கிழித்த, விளங்கு சுடர் நெடுங் கோட்டுப் 430
பொன் கொழித்து இழிதரும், போக்கு அருங் கங்கைப்
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மரப் பாணியில் தூங்கியாங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ,
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து, 435


திரையன் மந்திரச் சுற்றத்தொடு அரசு வீற்றிருக்கும் காட்சி


பெருங் கை யானைக் கொடுந் தொடி படுக்கும்
கருங் கைக் கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூடத் திண் இசை வெரீஇ, மாடத்து
இறை உறை புறவின் செங் கால் சேவல்,
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் 440
குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு,
முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும்,
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி,
இடைத் தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி, 445
கொடைக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து,
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகி,


பாணன் அரசனைப் போற்றிய வகை


'பொறி வரிப் புகர்முகம் தாக்கிய வய மான்
கொடு வரிக் குருளை கொள வேட்டாங்கு,
புலவர் பூண் கடன் ஆற்றி, பகைவர் 450
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி அல்லது, வினை உடம்படினும்,
ஒன்றல் செல்லா உரவு வாள் தடக் கை,
கொண்டி உண்டி, தொண்டையோர் மருக!
மள்ளர் மள்ள! மறவர் மறவ! 455
செல்வர் செல்வ! செரு மேம்படுந!
வெண் திரைப் பரப்பின் கடுஞ் சூர் கொன்ற
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு,
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு,
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி, 460
வந்தேன், பெரும! வாழிய நெடிது!' என,
இடனுடைப் பேர் யாழ் முறையுளிக் கழிப்பி,
கடன் அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி,
நின் நிலை தெரியா அளவை அந் நிலை


பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்


நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க,
465
நில்லா உலகத்து நிலைமை தூக்கி,
அந் நிலை அணுகல் வேண்டி, நின் அரைப்
பாசி அன்ன சிதர்வை நீக்கி,
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, 470
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங் குறை,
அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல்லின்
தெரி கொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்,
அருங் கடித் தீம் சுவை அமுதொடு, பிறவும், 475
விருப்புடை மரபின் கரப்புடை அடிசில்,
மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி,
மகமுறை, மகமுறை நோக்கி, முகன் அமர்ந்து,
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி,
மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் 480


பரிசு வழங்குதல்


ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி;
உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப்
பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு,
புனை இருங் கதுப்பகம் பொலிய, பொன்னின் 485
தொடை அமை மாலை விறலியர் மலைய;
நூலோர் புகழ்ந்த மாட்சிய, மால் கடல்
வளை கண்டன்ன வால் உளைப் புரவி,
துணை புணர் தொழில, நால்கு உடன் பூட்டி,
அரித் தேர் நல்கியும் அமையான், செருத் தொலைத்து

490

ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ,
அன்றே விடுக்கும் அவன் பரிசில்.


இளந்திரையனது மலையின் பெருமை


இன் சீர்க்
கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்,
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின், 495
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்,
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்,
செந் தீப் பேணிய முனிவர், வெண் கோட்டுக்
களிறு தரு விறகின் வேட்கும்,
ஒளிறு இலங்கு அருவிய மலைகிழவோனே. 500


தொண்டைமான் இளந்திரையனைக் 
கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.


பெரும்பாண் ஆற்றுப்படை முற்றும்

தனிப் பாடல்


கங்குலும் நண் பகலும் துஞ்சா இயல்பிற்றாய்,
மங்குல் சூழ் மாக் கடல் ஆர்ப்பதூஉம் - வெஞ் சின வேல்
கான் பயந்த கண்ணிக் கடு மான் திரையனை
யான் பயந்தேன்' என்னும் செருக்கு.