பரத்தை

8. மருதம்
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம் இல் பெருமொழி கூறி, தம் இல்,
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல,
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.

உரை

கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஆலங்குடி வங்கனார்.

80. மருதம்
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி,
பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி,
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது
அஞ்சுவது உடையளாயின், வெம் போர்
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி
முனை ஆன் பெரு நிரை போல,
கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே.

உரை

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - ஒளவையார்

164. மருதம்
கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு
துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண் பெரும் பௌவம் அணங்குக-தோழி!-
மனையோள் மடமையின் புலக்கும்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!

உரை

காதல்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது. - மாங்குடிமருதன்

364. மருதம்
அரில் பவர்ப் பிரம்பின் வரி புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி
எற் புறங்கூறும் என்ப; தெற்றென
வணங்கு இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன அவ் வரைக்
கண் பொர, மற்று அதன்கண் அவர்
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே.

உரை

வேறு ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது. - ஒளவையார்

370. முல்லை
பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின், இரு மருங்கினமே; கிடப்பின்,
வில்லக விரலின் பொருந்தி; அவன்
நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே.

உரை

கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டபரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - வில்லக விரலினார்