41-50

41
'தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு
வெண் பூம் பொய்கைத்து, அவன் ஊர்' என்ப; அதனால்
தன் சொல் உணர்ந்தோர் மேனி
பொன் போல் செய்யும் ஊர்கிழவோனே.

கழறித் தெருட்டற் பாலராகிய அகம் புகல் மரபின் வாயில்கள் புகுந்துழி, தலைவனையும் பாணன் முதலாகிய பக்கத்தாரையும் இகழ்ந்து, தலைவி கூறியது. 1

42
மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாணர் ஊர! நின் மாண் இழை அரிவை?
காவிரி மலிர்நிறை அன்ன நின்
மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே.

தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, 'தலைவன் பிற பரத்தையருடன் ஒழுகினான்' என்று புலந்தாளாக, அதனை அறிந்த தலைவி, அவன் தன் இல்லத்துப் புகுந்துழி, தான் அறிந்தமை தோன்றச் சொல்லியது. 2

43
அம்பணத்து அன்ன யாமை ஏறி,
செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும்
யாணர் ஊர! நின்னினும்
பாணன் பொய்யன்; பல சூளினனே.

பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப மறுத்த தலைமகள், பாணனோடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது. 3

44
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத்
தாய் முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு,
அதுவே ஐய, நின் மார்பே;
அறிந்தனை ஒழுகுமதி; அறனுமார் அதுவே.

பரத்தையர் மனைக்கண்ணே பல் நாள் தங்கி, தன் மனைக்கண்ணே வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 4

45
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று, நின் ஊரே;
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந! என் கண்ணே.

நெடுநாள் பரத்தையர் இடத்தனாய் ஒழுகிய தலைமகன் மனைவயின் சென்றுழித் தோழி சொல்லியது. 5

46
நினக்கே அன்று அஃது, எமக்குமார் இனிதே
நின் மார்பு நயந்த நல் நுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை ஆகி,
ஈண்டு நீ அருளாது, ஆண்டு உறைதல்லே.

மனைக்கண் வருதல் பரத்தை விலக்க விலங்கி, பின்பு, உலகியல் பற்றி, அவள் குறிப்பினோடும் வந்தமை அறிந்த தோழி தலைமகனைப் புலந்து சொல்லியது. 6

47
முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்
அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர!
மாண் இழை ஆயம் அறியும் நின்
5
பாணன் போலப் பல பொய்த்தல்லே.

பாணற்கு வாயில் மறுத்த தலைமகள் பின் அப் பாணனோடு தலைமகன் புகுந்து, தன் காதன்மை கூறியவழிச் சொல்லியது. 7

48
வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!
வேண்டேம், பெரும! நின் பரத்தை
5
ஆண்டுச் செய் குறியொடு ஈண்டு நீ வரலே.
பரத்தையர்மாட்டு ஒழுகாநின்று தன் மனைக்கண்

சென்ற தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. 8

49
அம் சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சில் மீன் சொரிந்து, பல் நெற்பெறூஉம்
யாணர் ஊர! நின் பாண்மகன்
யார் நலம் சிதையப் பொய்க்குமோ, இனியே?

பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினான் என்பது கேட்ட தலைமகள் தனக்கும் பாணனால் காதன்மை கூறுவிப்பான் புக்க தலைமகற்குச் சொல்லியது. 9

50
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர!
தஞ்சம் அருளாய் நீயே; நின்
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே.

மனையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பல் நாள் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 10

உரை

Home
HOME