221-230 |
221 |
அம்ம வாழி, தோழி! காதலர் |
|
பாவை அன்ன என் ஆய்கவின் தொலைய, |
|
நல் மா மேனி பசப்ப, |
|
செல்வல்' என்ப தம் மலை கெழு நாட்டே. |
|
'ஒருவழித் தணந்து வரைதற்கு வேண்டுவன முடித்து வருவல்' என்று தலைமகன் கூறக்கேட்ட தலைமகள் அவன் சிறைப்புறத்தானாய்க் கேட்ப, தோழிக்குச்சொல்லியது. 1 |
222 |
அம்ம வாழி, தோழி! நம் ஊர் |
|
நளிந்து வந்து உறையும் நறுந் தண் மார்பன் |
|
இன்னினி வாராமாறுகொல் |
|
சில் நிரை ஓதி! என் நுதல் பசப்பதுவே? |
|
குறி இரண்டன்கண்ணும் வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வந்து, சிறைப்புறத்து நின்றுழி, 'நின் நுதல் பசத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2 |
223 |
அம்ம வாழி, தோழி! நம் மலை |
|
வரை ஆம் இழிய, கோடல் நீட, |
|
காதலர்ப் பிரிந்தோர் கையற, நலியும் |
|
தண் பனி வடந்தை அற்சிரம் |
|
5 |
முந்து வந்தனர் நம் காதலோரே. |
வரைவிடை வைத்துப்பிரிந்த தலைமகன் குறித்த பருவத்திற்கு முன்னே வருகின்றமை அறிந்த தோழி தலைமகட்கு மகிழ்ந்து சொல்லியது. 3 |
224 |
அம்ம வாழி, தோழி! நம் மலை |
|
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில் |
|
துணி நீர் அருவி நம்மோடு ஆடல் |
|
எளிய மன்னால், அவர்க்கு; இனி, |
|
5 |
அரிய ஆகுதல் மருண்டனென், யானே, |
இற்செறிப்பு உணர்ந்த தலைமகள் ஆற்றாளாய், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 4 |
225 |
அம்ம வாழி, தோழி! பைஞ் சுனைப் |
|
பாசடை நிவந்த பனி மலர்க் குவளை |
|
உள்ளகம் கமழும் கூந்தல் மெல்லியல் |
|
ஏர் திகழ் ஒள் நுதல் பசத்தல் |
|
5 |
ஓரார்கொல் நம் காதலோரே? |
மெலிவு கூறி வரைவு கடாவக் கேட்ட தலைமகன் தான் வரைதற்பொருட்டால் ஒருவழித் தணந்து நீட்டித்தானாக, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 5 |
226 |
அம்ம வாழி,தோழி!நம் மலை |
|
நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள் |
|
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி, நின் |
|
வன்புடை விறல் கவின் கொண்ட |
|
5 |
அன்பிலாளன் வந்தனன், இனியே. |
வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 |
227 |
அம்ம வாழி! தோழி! நாளும், |
|
நல் நுதல் பசப்பவும், நறுந் தோள் ஞெகிழவும், |
|
'ஆற்றலம் யாம்' என மதிப்பக் கூறி, |
|
நப் பிரிந்து உறைந்தோர் மன்ற; நீ |
|
5 |
விட்டனையோ அவர் உற்ற சூளே? |
ஒருவழித் தணந்து வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 7 |
228 |
அம்ம வாழி, தோழி! நம் ஊர் |
|
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் |
|
இரந்து குறையுறாஅன் பெயரின், |
|
என் ஆவதுகொல் நம் இன் உயிர் நிலையே? |
|
தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி அறத்தொடு நின்றது. 8 |
229 |
அம்ம வாழி, தோழி! நாம் அழப் |
|
பல் நாள் பிரிந்த அறனிலாளன் |
|
வந்தனனோ, மற்று இரவில்? |
|
பொன் போல் விறல் கவின் கொள்ளும், நின் நுதலே. |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டான் என்பது கேட்டு, தலைமகட்கு எய்திய கவினைத் தோழி, தான் அறியாதாள் போன்று, அவளை வினாவியது. 9 |
230 |
அம்ம வாழி, தோழி! நம்மொடு |
|
சிறு தினைக் காவலன் ஆகி, பெரிதும் நின் |
|
மென் தோள் ஞெகிழவும், திரு நுதல் பசப்பவும், |
|
பொன் போல் விறல் கவின் தொலைத்த |
|
5 |
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே. |
தலைமகன் வரைவு வேண்டித் தமரை விடுத்துழி, மறுப்பர்கொல்லோ?' என்று அச்சம் உறுகின்ற தலைவிக்குத் தோழி சொல்லியது. 10 |