முகப்பு |
|
|
||||
எட்டுத் தொகை நூல்களுள் பதிற்றுப் பத்தும் புறநானூறும் புறப்பொருள் பற்றிய தொகை நூல்கள். இவை இரண்டும் அகவற் பாக்களால் இயன்றவை. எனினும், இரண்டிற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. முடிமன்னர் மூவரையும், வேளிர் முதலிய பிறரையும், பற்றிய பாடல்களின் தொகுதி புறநானூறு. ஆனால், பதிற்றுப் பத்தோ சேர மன்னர்களையே பற்றிய பாடல்களின் தொகுதி. |
||||
பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலின், இது பதிற்றுப் பத்து என்று பெயர் பெறலாயிற்று. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப்பெற்றமையின், இந் நூல் பத்துப் பகுதியாகக் கொள்ளத்தக்கது. இதிலுள்ள பத்துப் பத்துகளும் முதற் பத்து, இரண்டாம் பத்து, என்று இவ்வாறு எண்ணால் பெயர் பெற்றுள்ளன. இதனைத் தொகுத்தார், தொகுப்பித்தார், பற்றி யாதொன்றும் அறியக்கூடவில்லை. |
||||
நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் பிரதிகளில் மறைந்து போயின. எனினும், இவற்றைச் சார்ந்த பாடல்கள் சில தொல்காப்பிய உரைகளாலும், புறத்திரட்டு என்னும் தொகை நூலாலும் தெரிய வருகின்றன. இங்ஙனம் கிடைத்தவை நூலிறுதியில் கொடுக்கப் பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடலும் தொல்காப்பிய உரையிலிருந்து (பொருள். புறத். சூ. 16 நச்.) ஊகித்து, ஆராய்ச்சியாளரால் தெரிந்து கொள்ளப்பட்டதேயாகும். எனினும், இதனை ஒருதலையாகத் துணியக் கூடவில்லை. இக் கடவுள் வாழ்த்து, நூலைப் போன்று அகவற்பாவால் அமையவில்லை. ஈற்று அடி இரண்டு தவிர ஏனை அடிகள் வெள்ளடியாக உள்ளன. ஆகவே, இது மருட்பா ஆகும். பரிபாடலிலும் கலித்தொகையிலும் அவ்வவ்வகைப் பாடல்களாலேயே கடவுள் வாழ்த்து அமைந்துள்ளது. ஏனைய தொகை நூல்களில் ஆசிரியத்தால் அமைந்துள்ளது. இது மேலும் ஆராய்தற்கு உரியது. |
||||
ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், துறை, வண்ணம், தூக்கு, பெயர், என்பனவற்றைப் புலப்படுத்தும் பழங் குறிப்புகள் உள்ளன. அவ்வப் பாட்டில் அமைந்த சிறந்ததொரு தொடரே பாட்டின் பெயராக அமைக்கப்பட்டிருக்கிறது. இக் குறிப்புகள் அந்தந்தப் பாடல்களின் முடிவில் தரப்பெற்றுள்ளன. இவை நூலாசிரியராலோ தொகுத்தவராலோ கொடுக்கப்பெற்றன ஆகலாம். |
||||
ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப் பத்தைப் பாடினார், அதன் பாட்டுடைத் தலைவர், அவர் செய்த அரும் பெருஞ் செயல்கள், புலவருக்கு அவர் அளித்த பரிசில், முதலிய செய்திகளைக் குறிப்பிடும் பதிகம்' உள்ளது. இப் பதிகங்கள் ஆசிரியப் பாவில் தொடங்கி, கட்டுரையாக முடிவுபெறுகின்றன. இவை சாஸனங்களில் காணப்பெறும் மெய்க்கீர்த்திகளைப் போன்ற அமைப்பை உடையன. இவை தொகுத்தார் காலத்திற்குப் பிந்தியும், இதன் உரையாசிரியர் காலத்திற்கு முந்தியும், தோன்றியதாதல் வேண்டும் என்பது சில ஏதுக்களால் புலனாகின்றது. |
||||
இந் நூலுக்குப் பழைய உரை ஒன்று உள்ளது. இதனை எழுதியவரைப் பற்றிய செய்திகள் ஒன்றும் அறியக்கூடவில்லை, |
||||
இப் பழைய உரை, ஒவ்வொரு செய்யுளின் கருத்தையும், விளக்கி, இதனால் இன்னது கூறப் பெற்றது என்று சுட்டுகின்றது. இங்ஙனம உரையாசிரியர் எழுதியுள்ள தொடர்களையே சுருக்கி, ஒவ்வொரு பாட்டின் தொடக்கத்திலும், தலைப்பு இடப்பெற்றுள்ளது. இவை பாடலின் உள்ளுறை பொருளைப் பொதுமையாக உணர உதவுவனவாம். |
||||
இந் நூற் செய்யுட்களில் இப்பொழுது கிடைப்பன 80; உரைகளால் தெரிய வருவன 6. ஒரு சில செய்யுட்களில் சில சீர்களும் அடிகளும் சிதைந்து போயின. நாலாம் பத்துச் செய்யுட்கள் மட்டிலும், ஐங்குறுநூற்றிலுள்ள பதினெட்டாம் பத்தைப் (தொண்டிப் பத்து) போல, அந்தாதியாக அமைந்துள்ளன. |