மூன்றாம் பதிப்பின் முகவுரை

திருச்சிற்றம்பலம்

வீடலால வாயிலாய் விழுமியார் கணின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதிற்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.

கடைச்சங்கத்துப் புலவர்கள் அருளிச்செய்த எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாக விளங்கும் பரிபாடலென்னும் இந்நூலைப் பரிமேலழகருரையுடனும் பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடனும் இரண்டாம் முறையாக எந்தையாரவர்கள் 1935இல் அச்சிட்டு வெளியிட்டார்கள்.

இந்நூலின் அருமை பெருமைகளும் இதைப் பற்றிய விரிவான செய்திகளும் அவர்கள் எழுதியுள்ள முகவுரையால் நன்கு விளங்கும்.

எட்டுத்தொகை நூல்களுள் இஃதொன்றே இசை நூலாகும். இதன் செய்யுட்டொகை எழுபதென்று தெரிகிறது. அவற்றுள் இப்போது கிடைத்திருப்பவை 24 முழுப்பாடல்களும், 9 பாடல்களின் உறுப்புக்களுமேயாகும். எஞ்சிய பகுதி கிடைக்காமற்போனது தமிழ்மொழிக்கு ஒரு குறைவே. பரிமேலழகருரை 22 பாடல்களுக்கு மட்டுமே உள்ளது.

என் தந்தையாரவர்களுடைய குறிப்புக்களால் இப்பதிப்பு, சில திருத்தங்களை அடைந்துள்ளது.

இப்பதிப்பில் ஒவ்வொரு பாடலின் முதலில் பொருட் சுருக்கமும் அப்பால் மூலமும், அடிக்குறிப்பாகப் பரிமேலழகருரையும், ஒவ்வொரு பக்கத்தின் இறுதியில் பிரதிபேதமும், பாடலும் பரிமேலழகருரையும் முடிந்தவுடன் குறிப்புரையும் அமைக்கப் பெற்றுள்ளன. குறிப்புரையில் இலக்கணக் குறிப்பையும் ஒப்புமைப் பகுதிகளையும், மேற்கோள் விளக்கத்தையும், முற்பதிப்பிலிருந்த விசேடக் குறிப்பிற்கண்ட விஷயங்களையும் காணலாம். படிப்பவர்களுடைய பயன்கருதி இம்முறை மேற்கொள்ளலாயிற்று.