பாடினோர் வரலாறு

1. ஆசிரியன் நல்லந்துவனார் :- இவர் செய்தனவாக இப்பகுதியில் நான்கு பாடல்கள் (6, 8, 11, 20) உள்ளன. அவற்றுள் எட்டாவது முருகக்கடவுளுக்கும் 6, 11, 20 இம்மூன்றும் வையைக்கும் உரியவை.

எட்டாம் பாடலில் திரிமூர்த்திகளும் ஏனைத்தேவர்களும் முருகக் கடவுளைத் தரிசித்தற்பொருட்டு வந்திருத்தலால் திருப்பரங்குன்றம் இமயமலையையும் அதிலுள்ள சுனை இமயமலையிலுள்ள சரவணப் பொய்கையையும் ஒக்குமென்றும் ஆடவரும் மகளிரும் மகப்பேறு முதலிய பயன்களைக் கருதிப் பலவகைக் காணிக்கைகளுடன் அக்குன்றத்தைச்சார்ந்து அவரைவணங்கிப் பலவகை வழிபாடுகள் செய்து வேண்டிய வரங்களைப் பெற்றுய்கின்றனரென்றும் கூறுதன் முகமாக அக்குன்றத்தின் பெருமையையும், அதிற் கடம்பமரத்தின் அடியிலே கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளின் திருவருட் சிறப்பையும் பாராட்டியிருக்கும் பகுதியும், அக்குன்றின் வாழ்வையே தம் வாழ்வாகக் கருதி உள்ளமுருகி இவர் அதனை வாழ்த்தியிருக்கும் பகுதியும், பிறவும் அறிந்து இன்புறற்பாலன. இவற்றை உட்கொண்டே,


"சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற் 
சீர்மிகு முருகன் றண்பரங் குன்றத்
தந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை 
யின்றீம் பைஞ்சுனை" (அகநா. 59) என்று மதுரை மருதனிளநாகனார் கூறினர் போலும்.

மற்றைப் பாடல்களில் மழைவளமும் வையைப் பெருக்கும் புதுநீர் விழவின்பொருட்டுப் பலர் தத்தமக்கேற்ப ஊர்திகளில் ஏறிக்கொண்டு வையைக்குக் கையுறைப் பொருள்களாக ஏந்திச் செல்லும் பொன்மீன் முதலியனவும் நீர்விளையாட்டிற்குக் கொண்டுசெல்லும் கருவிகளும் தெப்ப வகைகளும் சனநெருக்கமும் நீர்விளையாட்டும் பலவகையாக ஆணையிடும் வழக்கும் பிறவும் கூறப்பெற்றுள்ளன. பரிபாடலைப்பெற்ற பெருமை வாய்ந்ததென 11-ஆம் பாடலில் இவர் வையையாற்றைச் சிறப்பித்திருத்தலும், அது 1கடலோடு கலத்தலை 20-ஆம் பாடலில் உவமை முகத்தால் தெரிவித்திருத்தலும் அறிதற்பாலன. அதனைத் தமிழ் வையையென்றும் தென்னவன் வைகையென்றும் கூறுகிறார்.


1 ஸ்ரீ ஸேதுஸம்ஸ்தானத்திற் கீழ்கடலோரத்தில் ஆற்றங்கரையென்னும் ஊரிலுள்ள சத்திரம், வையைநதி கடலொடு கலக்குந்துறையில் ஸ்நானஞ் செய்ய வருவோர்க்குப் பண்டைக்காலத்தில் அமைக்கப்பெற்றதென்று கேள்வியுண்டு; மதுரை ஜில்லா சரித்திரத்தாலும் இதுதெரிகின்றது. திருவாதவூரர் புராணமுடையாரும் பரஞ்சோதி முனிவரும் வையை கடலோடு கலவாமைக்குக் காரணம் கற்பித்தது,