என இயம்புதலும், வியத்தகும் உவமைகளாம். இனி, இப் பரிபாடலின்கண் ஆண்டாண்டுப் பயின்றுவரும் இன்னோரன்ன இனிய உவமைகள் சாலப்பல. அவையிற்றை நூலின்கட் காண்க.

இனி, இந் நூலின்கண் அங்கங்கே வருஞ் சுவையுடைய செய்திகள் சிலவற்றைக் காண்போம்.

ஐம்பெரும் பூதங்களாகவும் பிறவுமாகவும் நம்மாற் காணப்படும் இப் பேருலகம், நுண்ணிதாகியதோர் அறிவு வெளியினின்றும் தோன்றியதாகும். பலவாகப் பார்க்கப்படும் இவ்வுலகப் பொருள்கள் அனைத்திற்கும் மூலமாகவுள்ள பொருள் ஒன்றேயாம். அவ்வொரு பொருளே இங்ஙனம் காலப் பேரெல்லையிலே பரிணமித்து விரிந்தது. விரிந்தவாறே இவ்வுலகம் மீண்டும் ஒடுங்கும் இயல்பிற்று என, நம் பண்டைத் தமிழ்ச் சான்றோர் நன்கு அறிந்திருந்தனர். பூதங்களைப்பற்றிய அறிவு சிறந்தோங்கிய இற்றை நாளினும் அம் முன்னையோர் முடிபு மறுக்கப்படவில்லை. இக் காலத்துப் பூத நூலறிஞர் அம் முன்னையோர் எய்திய முடிவினைக் காண இன்னும் பெரிதும் அறிவுவளர்ச்சி பெறுதல் வேண்டும் என்பதே குறை. அஃதாவது இப்பேருலகம் ஒரே முதலினின்றும் தோன்றுவது என்பதும், அழியுங்கால் அவ்வொரே முதலாய்ச் சென்றடங்கும் என்பதும் நம் முன்னோர் கண்ட முடிபொருள். இற்றைநாட் பூதநூலோர், இப் பேருலகத்திற்கு முதலாகச் சில அணுக்கள் உள்ளன என்பர். இச்சில அணுக்களும் காரியப்பொருளேயல்லது காரணம் அன்று. இவ்வணுக்களுக்கும் காரணமாய்ப் பிறிதொன்றுளது என்னும் உண்மையை இவர் உணர இன்னும் பல நூற்றாண்டுகள் வேண்டும் போலும் என்பது. இனி வியத்தகும் இக்கொள்கையினை ஆசிரியர் நன்னாகனார் இப் பரிபாடலின்கட் கூறும் அழகினைக் கேண்மின்:

"தொன்முறை இயற்கையின் மதியொ. . . . .
. . . . . . . . . . . . . . . . மரபிற் றாகப்
பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்து இசையிற் றோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்துவளி கிளர்ந்த ஊழூ ழூழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடுயர்பு ஈண்டி அவற்றிற்கும்