அதுகேட்ட தலைவன் "நங்காய்! வையை காமப்பெருக்கன்றோ அதனாற் புணையேறி வரக் காலந்தாழ்த்தது" என்றான்.

குற்றமே காணும் நோக்கமுடைய அப்பரத்தை தலைவன் கூறியதற்கு, அப்பிறமகளிர் காமப்பெருக்கம் வையைப் பெருக்கினை ஒத்ததென்று தலைவன் கூறியதாகப் பொருள்கொண்டு பின்னும் பெரிதும் புலந்து, அத் தலைவனொடு சொல்லாடுகின்றாள். இவர்தம் சொல்லாட்டம் கற்போர்க்குக் கழிபேருவகை அளிப்பதாக உள்ளது.

இனி, இக் காதற் பரத்தை அளவின் மிக்கு ஊடுகின்றாள்; அதனாலே, இத்தலைவன் இவளைப் பிரிந்து போயினும் போவான் என்றஞ்சிய முதுபரத்தையர்; அவட்குக் கூறும் அறிவுரைகளைக் கேளுங்கள்:

"ஏடி! நீ மிகையாக அவனை வெகுள்கின்றாய்! அவனோ உன் சினத்திற்குப் பெரிதும் அஞ்சுகின்றான்; ஊடல் மிகுந்து துனியாயவிடத்துக் காமவின்பம் பதனழிந்து கெடும்; 'உப்பமைந்தற்றாற் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்' பிழையாகும். நீயோ பெண்ணாகப் பிறந்தவள்; இங்ஙனம் நீ அவன் உளமிறுகி வெறுக்கும்படி சினப்பாயேல் அவன் நின்னை வெறுத்து நீத்து அகலுதல் ஒருதலை; நீயோ அவன்பாற் கன்றிய காமமுடையை; அவன் சென்றுவிட்டால் நீ அவனைத் தேடி இருளிலே நீந்திக் கொண்டு கிடக்கவேண்டியதுதான்; ஆதலால் வெகுளற்க! அவனை ஏற்று அவனோடு ஆடல்தொடங்குக."

மிகுதிக்கண் மேற்சென்றிடிக்கும் இப் பெரியார் மொழி வருமாறு:

"சினவல் நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்
துனிநீங்கி ஆடல் தொடங்கு! துனி நனி
கன்றிடில் காமம் கெடூஉம் மகள்! இவன்
அல்லா நெஞ்சம் உறப்பூட்டக் காய்ந்தே
வல்லிருள் நீயல்! அது பிழையாகும்"

என்பதாம். இலக்கிய இன்பந்தரும் பகுதியில் இஃது எத்துணைச் சிறப்புடையது உணர்மின்.

இனி 19 ஆம் பாடலின்கண் இங்ஙனமே தலைவி தோழியர் முதுமகளிர் பரத்தை ஆகிய இவர்களுள் வினாவும் செப்புமாய் நிகழும் உரையாடல் சிறந்த இன்பந்தருவதாம்.

தலைவி அறியாதபடி ஒரு தலைவன் அவள் அணிகலன்களிற் சிலவற்றை ஒரு பரத்தைக்குக் கொடுத்திருந்தான்; இவை களவு