ரல்லர். மக்கள் நுதலிய காமம் பாடுதலினும்
இறைவன்பாற் காதலாகிக்
கசிந்து கண்ணீர் மல்கிப் பாடல் ஓதுதல், சாலச் சிறந்ததாம் என்னும் ஒரு
புத்துணர்ச்சி அக்காலத்தேதான் தோன்றியது. இவ்வுணர்ச்சியின்
தூண்டுதலாலே தான், திருமுருகாற்றுப்படை எழுந்தது. பாரதம் பாடிய
பெருந்தேவனாரும் தொகை நூல்கட்குக் கடவுள் வாழ்த்துப்
பாடியமைத்தனர். அக்காலத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த காலத்திலேதான்
தமிழகத்தே நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றித் தேவார முதலிய
தெய்வப் பாடல்களை இயற்றி இசையினாலே இறைவனை மன முருக
ஏத்திப் பரவாநின்றனர். இவ்வுணர்ச்சி தோன்றிய காலத்திலேயே
பரிபாடல் முதன்முதல் கடவுட் பாடலாகவும் கையாளப்பட்டது போலும்.
|
இனி, இப் பரிபாடலின்கண் பண்டைத் தமிழ்ச் சான்றோர்
கொண்டிருந்த கடவுளைப் பற்றிய உயர்ந்த கொள்கை பலவற்றையும் காணலாம்.
|
`கற்றதனால் ஆய பயன் வாலறிவன் நற்றாள் தொழுதல்' என்ற
சீரிய கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர், இசை கெழுமிய
இப் பரிபாடலை அவ் வாலறிவனைத் தொழுதற்குச் சாதனமாக்கிக்
கொண்டது சாலவும் பொருந்துவதேயாகும். இப்பரிபாடலின்கண்,
ஆசிரியர் நல்லழிசியார் என்னும் புலவர் பெருமகன் முருகவேளை
வணங்கி "இறைவனே! எம்போன்ற மானிடரை அணுகி அணுகி அவர்
மனநெகிழும்படி பணிமொழி பற்பல புனைந்து பாடுகின்ற புன்செயலை
இனி அறவொழித்து எஞ்ஞான்றும் நின்னுடைய புகழினையே ஏத்தி ஏத்தி
வணங்குவேம். அங்ஙனம் வணங்குதல் தான் எற்றுக் கெனின்? பொன்னும்
பொருளும் போகமும் பெறுதல் கருதியன்று. இவையெல்லம் கனவெனத்
தோன்றிக் கணத்திடை அழியும் பொய்ப்பொருள்கள் ஆதலால்,
அவையிற்றை வேண்டேம்; யாம் வேண்டுவது என்றென்றும் அழியாது
நிலைபெறும் பேரின்பமாகிய வீட்டின்பமே. அதனை அருள்க!" என்னும்
பொருள்பட வரம் வேண்டாநிற்ப, இக் கருத்தினை நாயன்மார்களும்
ஆழ்வார்களும் பற்பல இடங்களிலே அருளிச்செய்திருத்தலைக் காணலாம்.
|
இறைவன் ஒருவனே உளன்; அவன் யாண்டும் எப்பொழுதும்
எப்
பொருளினகத்தும் இடையறாது உறைபவன்; அங்ஙனமாயினும் பற்றற்ற
அப் பரம்பொருளைச் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினேமாகிய யாம்
மனத்தால் நினைதற்கும் வாயான் வழுத்துதற்கும் அவ் விறைவனுக்குத் திருவுருவும் வரலாறுகளும்
|