இனி,
இப் புலவர்பெருமான், குறிஞ்சி நிலக்கிழவனாகிய
முருகவேளுக்கும், தேவசேனைக்குமிடையே நிகழ்த்தும் சொல்லாடலும்
வள்ளி அம் முருகவேளை இனி அத் தேவசேனை யின்பாற்,
"குறுகல் என்று கோதை கோலாக
இறுகிறுக யாத்துப் புடை"த்தலும்,
பின்னர், வள்ளியின் மயிலும், தேவசேனை மயிலும்,
கிளி,
வண்டு முதலியனவும் செய்யும் பூசலும், இருவர் தோழியரும்
எதிர்த்துப் பொருதலும், (இப் புலவர் மண்ணவர் மகளாகிய வள்ளியின்
சார்பினின்று) தேவசேனையின் தோழியரைத் தோற்றோடுமாறு
செய்தலும், பிறவும் மிகமிக இன்பந்தரும் முறையில் விளம்பியுள்ளார்.
இனி, அவர் 18 ஆம் பாடலில் ஒரு கானவன் மணிப்பொறி
ஒள்ளொளிஆலும் மஞ்ஞை ஒன்றன் எழிலில் மனம்போக்கித் தன்னை
மறந்து நிற்றலும், அவன் காதலி அச் செயலேதுவாக அவனொடு ஊடிப்
பேசுதலும், அவன் அவட்கு நயமாகப் பணிமொழி கூறி உணர்த்துதலும்,
தலைவன்பானின்று வரும் பாணன் ஒருவனைத் தலைவி
அசதியாடிப் 'பாணா நின்பாட்டுப் பொய்வளம் பூத்தன' என்று நகுதலும்
பிறவும் நயம்படக் கூறியுள்ளார்.
குன்றம் பாடுதலில் வல்லவர் ஆதல் கருதியே இவர்
'குன்றம்பூதனார்' என்று வழங்கப்பட்டனர் போலும்.
7. கேசவனார்
இப் புலவர்பெருமான் 14 ஆம் பாடலை யாத்தவர். மேலும்,
அப் பாட்டிற்கு இவரே இசை வகுத்துள்ளனர். எனவே, இப் பெரியார்
இயலிற்போன்றே இசையினும் வல்லுநர் என்று தெரிகின்றது.
இவர், "சூர்மருங் கறுத்த சுடர் வேலோயே!" "பாட்டமர்ந்தோயே!"
"நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே!" "சீருடையோயே!"
"அறனமர்ந்தோயே!" என நயம்பட விளித்து 'நின்னைத் துன்னித்
துன்னி வழிபடுவதன் பயம் இன்னும் இன்னும் அவ் வழிபாடு நின்
தொன்முதிர் புகழினும் பலவாகுக' என வேண்டுதல், இவர் அப்
பெருமான் சேவடியைக் கூடுமன்பினிற் கும்பிடலேயன்றி வீடும்
வேண்டா மேம்பாடுடையர் என்பதைப் புலப்படுத்தும். |