| புத்தகங்களை நிறைமனத்தோடு நான்
 பார்த்துக்கோடற்கு உதவி, இக்கலித்தொகை
 திருத்தமாக வெளிவர வேண்டுமென்பதே தங்கள்
 கருத்தென்று தங்கள் தமிழபிமானத்தைக் காட்டி
 நான் அச்சிடத் தொடங்குவதில் தங்களுக்கு மகிழ்ச்சியென்று
 கூறி எனக்கு ஊக்கமளித்தார்கள். இதற்காக அவர்கள்பால்
 மிக்க நன்றியறிவுடையேன். அன்றியும் அவர்களுள்
 முதலியார் அவர்கள் தொல்காப்பியம்
 பொருளதிகாரம் இளம்பூரணர் உரையில் அச்சிடப்பெறாத
 பகுதியை இப்போது நான் விரும்பியதற்குச்
 சிறிதும் தடையின்றி உவந்துகொடுத்திருப்பது
 பேருதவியாக இருக்கிறது. காலத்தாற்செய்த உதவி
 பெரிதன்றோ! இதனைப் பதிப்பித்தலில்
 ஊக்கம் குன்றாவாறு என்னைத் தூண்டிவருஞ் சில தமிழபிமானிகளின்
 அன்புடைமையை நினைக்குந்தோறும் மிக்க மகிழ்ச்சி
 உண்டாகிறது. நான், இந்நூல் முழுதுக்கும்
 தெளிவாக விளங்கக்கூடிய 2000 குறிப்புக்களையே சேர்க்க
 முன்பு எண்ணியிருந்தும் பின்பு ஆராய்ச்சியாளர்க்கு
 ஒருவாறு தொடர்புடையவற்றையும் சேர்ப்பது உதவியாமென்று
 கருதி உய்த்துணரத்தக்க குறிப்புக்களையும் சேர்த்திருக்கிறேன்.
 அதனால் இப்பகுதியின்கண்ணே குறிப்புக்கள்
 நாலாயிரத்துக்கு மேலாயின. அவற்றுட் சிலவற்றுக்கு
 ஆகரம் குறிக்கப்பெறவில்லை; கூடுமானால் பின்பு
 குறிக்கப்பெறும். இப்பதிப்பில் எனது மறதி
 அயர்ச்சி அறியாமை முதலியவற்றாலும், எனக்கு வேண்டியகாலத்து
 இதுகாறும் அச்சிடப்படாத நூல்கள் சில கிடைக்காமையாலும்,
 ஐயுற்றவற்றைத் தெளிவிக்கத்தக்க
 புலமையுடையாரை நான் பெறாமையாலும் சில பிழைகள்
 நேர்ந்திருக்கக்கூடும். அவற்றைப் பொறுத்தருளவும்,
 எனக்கு அறிவிக்கவும் அறிஞர்களை வேண்டுகிறேன். 
	
		| உள்ளமே
 யுன்ற னுழப்பை யுணரவல்லர் வெள்ளமே யில்லை மிகச்சிலரே - கள்ளமே
 அன்னார் புரியா ரகமகிழ்ச்சி காட்டுவரென்
 றின்னாமை நீங்கி யிரு.
 |  ‘இந்நூல், விரைவில் இனிது
 நிறைவேற அருள்செய்யவேண்டும்’ என்று தமிழ்த்
 தெய்வத்தை வணங்குகிறேன்.
 |