| மகப்பொரு ளுரையாசிரியராலும், பரிமேலழகராலும்,
 நாற்கவிராச நம்பியாலும், இலக்கணவிளக்க
 வுரைகாரராலும், அகப்பொருட் பகுதிக்கும், இவர்களாலும்
 சேனாவரையராலும், கல்லாடராலும் சிலப்பதிகாரம்
 நேமிநாதம் நன்னூல் யாப்பருங்கலவிருத்தி
 யாப்பருங்கலக் காரிகை வீரசோழியம் மாறனலங்காரம்
 ஆகிய இவற்றினுரையாசிரியர்களாலும், பிரயோக
 விவேகநூலாராலும் மயிலேறும்பெருமாள்
 பிள்ளையாலும், சொக்கப்ப நாவலராலும், பிறராலும்
 சொற்பொருளாராய்ச்சிகளுக்கும் யாப்புக்கும்
 தத்த முரைகளில் பற்பல விடங்களில் மேற்கோளாகக்
 காட்டப்பெற்ற சிறப்பு வாய்ந்துள்ளது. அவற்றை
 அறிந்துகோடற்கு இந்நூலின் பலபக்கத்துமுள்ள
 அடிக்குறிப்புக்கள் உதவி செய்வனவாம்.
 இக்கலித் தொகையில் ஒவ்வொருதிணையும்
 முதற்பொருள், கருப் பொருள், உரிப் பொருள்
 கொண்டு புனைந்துரைக்கப் பெற்றிருக்கும் அழகு
 தமிழறிஞர்களுக்கு மிக்க இன்பத்தைத்
 தருவதாம். அன்றியும், இதன் முல்லைத்திணையிலுள்ள
 கலிப்பாக்கள் அசுரமணத்தின் ஒரு பகுதியாகிய
 ஏறுகோடற் செய்தியையும் குடிகளுக்குத் தம் அரசன்மாட்டிருந்த
 அன்பினிலையையும் அறிந்துகோடற்குச் சிறந்த
 கருவியாகும். இது பாவின் பெயரால் தொகுக்கப்பெற்ற
 நூலுக்கு, தண்டியலங் காரவுரையிலும் (சூ. 4) இலக்கணவிளக்கவுரையிலும்
 (சூ. 625) மேற்கோளாகக் காட்டப்பெற்றிருக்கிறது.
 இப்பாவின் இலக்கணம், ‘அகத்தியமும்
 தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூல்’ என்று
 தொல்காப்பியம் புறத்திணையியல் 35-ஆம் சூத்திரவுரையில்
 நச்சினார்க்கினியர் எழுதியிருப்பதால் இவ்விரு
 நூலிலும் கூறப்பெற்றுள்ளதென்று அறியப்படுமாயினும்
 முன்னதிற் சில சூத்திரங்களேயன்றி மற்றவை
 இறந்தமையின், பின்னதாகிய தொல்காப்பிய நூல்கொண்டே
 அறியத்தக்கதா யிருக்கிறது. அதிற் பெரும்பாலன
 இந்நூல் 23-ஆம் பக்கத்திலுள்ள உரையில் வந்துள்ளன. இதிலுள்ள செய்யுட்கள் 150.
 இறையனாரகப்பொருளுரையிலும்,
 தொல்காப்பியவுரைகளிலும், இந்நூலுரையிலும் இத்தொகை
 இவ்வளவு தொகை யுடையதென்றே கூறப்பெற்றிருக்கிறது.
 இந்த 150. செய்யுட்களும் கலியின்வகைகளே. இவற்றுள்,
 ஒத்தாழிசைக்கலி 61; கொச்சகம் 49, கொச்சக
 வொருபோகு 1;
 |