பாடினோர் பகுதி

ஆலம்பேரி சாத்தனார்

47. பாலை
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
5
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து,
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
10
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,
குறு நடைப் புறவின் செங் காற் சேவல்
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி,
15
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன்
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
வேய் புரை பணைத் தோள், பாயும்
நோய் அசா வீட, முயங்குகம் பலவே.

தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்

81. பாலை
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
5
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும்
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
10
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மை எழில் உண்கண் கலுழ
15
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே?

பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்

143. பாலை
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
5
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும்
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே,
10
வசை இல் வெம் போர் வானவன் மறவன்
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
15
தண் கமழ் நீலம் போல,
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.

பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி சாத்தனார்

175. பாலை
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்,
5
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும்
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண்
தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து
வருதும்' என்றனர் அன்றே தோழி!
10
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன்
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
15
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்,
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு
மண் பயம் பூப்பப் பாஅய்,
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?

பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி சாத்தனார்.