பாடினோர் பகுதி |
இடைக்காடனார் |
துஞ்சுவது போல இருளி, விண் பக |
|
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு |
|
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ, |
|
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு, |
|
5 |
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்; |
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை |
|
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை, |
|
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை, |
|
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து |
|
10 |
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை; |
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல், |
|
காமர் துணையொடு ஏமுற வதிய; |
|
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் |
|
பரப்பியவைபோற் பாஅய், பல உடன் |
|
15 |
நீர் வார் மருங்கின் ஈரணி திகழ; |
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்! |
|
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர் |
|
கருவிக் கார்இடி இரீஇய |
|
பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே. |
|
பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை, |
|
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப் |
|
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து, |
|
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால், |
|
5 |
வித்திய மருங்கின் விதை பல நாறி, |
இரலை நல் மானினம் பரந்தவைபோல், |
|
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர், |
|
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி, |
|
களை கால் கழீஇய பெரும் புன வரகின் |
|
10 |
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட, |
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை |
|
காமர் கலவம் பரப்பி, ஏமுறக் |
|
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த |
|
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து, |
|
15 |
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் |
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக் |
|
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி, |
|
விரிஉளை, நல் மான் கடைஇ |
|
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே. |
|
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார் | |
உரை |
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து, |
|
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம் |
|
பருவம் செய்த பானாட் கங்குல், |
|
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப, |
|
5 |
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி, |
திண் கால் உறியன், பானையன், அதளன், |
|
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, |
|
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன், |
|
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப, |
|
10 |
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ, |
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும் |
|
தண் நறு புறவினதுவே நறு மலர் |
|
முல்லை சான்ற கற்பின் |
|
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக் காடனார் | |
உரை |
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன |
|
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல் |
|
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு, |
|
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி, |
|
5 |
இன் துயில் எழுந்து, துணையொடு போகி, |
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் |
|
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி, |
|
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர், |
|
விசைத்த வில்லர், வேட்டம் போகி, |
|
10 |
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும் |
காமர் புறவினதுவே காமம் |
|
நம்மினும் தான் தலைமயங்கிய |
|
அம் மா அரிவை உறைவு இன் ஊரே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - இடைக்காடனார் | |
உரை |
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, |
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், |
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு |
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, |
|
5 |
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, |
செய்து விட்டன்ன செந் நில மருங்கில், |
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, |
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, |
|
10 |
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, |
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, |
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் |
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக் |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
15 |
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, |
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, |
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை |
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும் |
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என, |
|
20 |
நம் நோய் தன்வயின் அறியாள், |
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி, |
|
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு, |
|
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ, |
|
போழ்ந்த போலப் பல உடன் மின்னி, |
|
5 |
தாழ்ந்த போல நனி அணி வந்து, |
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி, |
|
இடியும் முழக்கும் இன்றி, பாணர் |
|
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன |
|
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல |
|
10 |
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை, |
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில், |
|
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி, |
|
மணி மண்டு பவளம் போல, காயா |
|
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய, |
|
15 |
கார் கவின் கொண்ட காமர் காலை, |
செல்க, தேரே நல் வலம் பெறுந! |
|
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், |
|
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே! |
|
பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
மேல் |