பாடினோர் பகுதி
இடையன் நெடுங்கீரனார்

166. மருதம்
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும்
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில்,
5
நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை,
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்,
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின்
அனையேன்ஆயின், அணங்குக, என்!' என
10
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின்,
யார்கொல் வாழி, தோழி! நெருநல்
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ,
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு,
புதுவது வந்த காவிரிக்
15
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே?

பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார்