பாடினோர் பகுதி

ஈழத்துப் பூதன் தேவனார், மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

88. குறிஞ்சி
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
5
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக்
10
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து,
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி,
கொடு விரல் உளியம் கெண்டும்
15
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார்

231. பாலை
'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்,
இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி,
நல் இசை வலித்த நாணுடை மனத்தர்
5
கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர்,
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கைக்
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை
வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக
10
வருவர் வாழி, தோழி! பொருவர்
செல் சமம் கடந்த செல்லா நல் இசை,
விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன்
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
ஆடு வண்டு அரற்றும் முச்சித்
15
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே.

தலைமகள் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

307. பாலை
'சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய்,
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட,
பகலும் கங்குலும் மயங்கி, பையென,
பெயல் உறு மலரின் கண் பனி வார,
5
ஈங்கு இவள் உழக்கும்' என்னாது, வினை நயந்து,
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை
மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து,
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை,
10
பெருங் கை எண்கினம் குரும்பி தேரும்
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில்,
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து
உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது,
இரும் புறாப் பெடையொடு பயிரும்
15
பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்