பாடினோர் பகுதி
ஒரோடோகத்துக் கந்தரத்தனார்

23. பாலை
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல்,
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,
5
காடே கம்மென்றன்றே; அவல,
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ,
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே;
10
அனையகொல் வாழி, தோழி! மனைய
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும்
மௌவல், மாச் சினை காட்டி,
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே!

தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்

95. பாலை
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்;
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்;
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின்
5
எவனோ? வாழி, தோழி! பொரிகால்
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ,
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க,
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும்
10
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,
கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரையஅல்ல, என் மகட்கு' எனப் பரைஇ,
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
15
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே?

போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்

191. பாலை
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ,
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி,
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர்
5
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர்
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
10
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை,
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி,
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும்,
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
15
அறல் என விரிந்த உறல் இன் சாயல்
ஒலி இருங் கூந்தல் தேறும்' என,
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?

தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்