பாடினோர் பகுதி
உலோச்சனார்

20. நெய்தல்
பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி,
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ,
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
5
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித்
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி,
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப்
10
பல் பூங் கானல் அல்கினம் வருதல்
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர்,
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை,
எல்லையும் இரவும் என்னாது, கல்லென
15
வலவன் ஆய்ந்த வண் பரி
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே.

பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது. - உலோச்சனார்

100. நெய்தல்
அரையுற்று அமைந்த ஆரம் நீவி,
புரையப் பூண்ட கோதை மார்பினை,
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து,
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே.
5
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை,
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
10
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும்
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான்,
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப்
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன
15
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர்
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!

தோழி வரைவு கடாயது. - உலோச்சனார்

190. நெய்தல்
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி, எல் பட,
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே;
5
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்;
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப்
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த
வம்ப நாரை இரிய, ஒரு நாள்,
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,
10
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப,
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
நிரைமணிப் புரவி விரைநடை தவிர,
15
இழுமென் கானல் விழு மணல் அசைஇ,
ஆய்ந்த பரியன் வந்து, இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே!

தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - உலோச்சனார்

200. நெய்தல்
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்,
புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை,
ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து,
இன்னா உறையுட்டுஆயினும், இன்பம்
5
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள்,
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப!
பொம்மற் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி,
10
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற,
நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று,
சேந்தனிர் செல்குவிர்ஆயின், யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்;
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.

தலைமகள் குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார்
210. நெய்தல்
குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்
எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன்
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட,
விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த்
5
திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து,
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி,
தான் இவண் வந்த காலை, நம் ஊர்க்
கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி,
10
ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன்
சாயல் மார்பின் பாயல் மாற்றி,
'கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச்
செலவு அரிது என்னும்' என்பது
பல கேட்டனமால் தோழி! நாமே.
தோழி தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - உலோச்சனார்

300. நெய்தல்
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை,
5
எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர்,
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல்
செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி,
'செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை' எனச்
சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து,
10
தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது,
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப்
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,
சேணின் வருநர் போலப் பேணா,
இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின்,
15
வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ,
'துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்
ஓதம் மல்கலின், மாறு ஆயினவே;
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என,
எமர் குறை கூறத் தங்கி, ஏமுற,
20
இளையரும் புரவியும் இன்புற, நீயும்
இல் உறை நல் விருந்து அயர்தல்
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார் மணி மிடை பவளம் முற்றும்நித்திலக் கோவை

330. நெய்தல்
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும்,
வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும்,
இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும்,
தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர்
5
அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு
செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்!
செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று,
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும்,
10
காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ?
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே;
குப்பை வெண் மணற் குவவுமிசையானும்,
எக்கர்த் தாழை மடல்வயினானும்,
ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு,
15
சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த
கடுஞ் செலல் கொடுந் திமில் போல,
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே!

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார்

400. நெய்தல்
நகை நன்று அம்ம தானே 'அவனொடு,
மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து,
கானல் அல்கிய நம் களவு அகல,
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை,
5
நூல் அமை பிறப்பின், நீல உத்தி,
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி,
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந் தினைக்
குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு
10
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ,
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி,
மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப்
புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க்
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி,
15
பால் கண்டன்ன ஊதை வெண் மணல்,
கால் கண்டன்ன வழி படப் போகி,
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்,
இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை,
20
பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு,
நேமி தந்த நெடுநீர் நெய்தல்
விளையா இளங் கள் நாற, பலவுடன்
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும்
புதுவது ஆகின்று அம்ம பழ விறல்,
25
பாடு எழுந்து இரங்கு முந்நீர்,
நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே!

தலைமகன் வரைந்து எய்திய பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது. -உலோச்சனார்