பாடினோர் பகுதி
ஊட்டியார்

68. குறிஞ்சி
'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
5
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;
பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள்,
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை
10
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்
வருவர்ஆயின், 'பருவம் இது' எனச்
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக,
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து
15
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத்
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்
வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
20
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப்
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.

தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - ஊட்டியார்

388. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின்,
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல்
5
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி,
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து,
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி
இன் இசை ஓரா இருந்தனமாக,
10
'மை ஈர் ஓதி மட நல்லீரே!
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து,
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என,
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட,
15
சொல்லிக் கழிந்த வல் விற் காளை
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து,
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்,
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என,
அன்னை தந்த முது வாய் வேலன்,
20
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்;
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின்,
வினவின் எவனோ மற்றே 'கனல் சின
மையல் வேழ மெய் உளம்போக,
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
25
காட்டு மான் அடி வழி ஒற்றி,
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே?

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார்