பாடினோர் பகுதி

எயினந்தை மகனார் இளங்கீரனார்

3. பாலை
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
5
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
10
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?

முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
- எயினந்தை மகனார் இளங்கீரனார்.

225. பாலை
அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
இன்றே இவணம் ஆகி, நாளை,
5
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற
அகலா அம் துளை, கோடை முகத்தலின்,
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்,
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து,
10
யாத்த தூணித் தலை திறந்தவைபோல்,
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர,
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை
15
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
செறி தொடி முன்கை, நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்

239. பாலை
அளிதோதானே; எவன் ஆவதுகொல்?
மன்றும் தோன்றாது; மரனும் மாயும்
'புலி என உலம்பும் செங் கண் ஆடவர்,
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்,
5
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும்
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி,
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின்,
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
10
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய,
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே,
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என,
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்த
15
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே!

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்

289. பாலை
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும்
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்,
5
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும்,
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
10
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி,
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப,
மை அற விரிந்த படை அமை சேக்கை
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ,
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
15
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி,
'நல்ல கூறு' என நடுங்கி,
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?

பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்

299. பாலை
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும்,
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
5
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு,
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்,
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்,
10
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென,
வைகு நிலை மதியம் போல, பையென,
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
15
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப,
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி,
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு,
அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல் மாண்டு
திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா,
20
பருவரல் எவ்வமொடு அழிந்த
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே.

இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார்

361. பாலை
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
5
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
10
கரியாப் பூவின் பெரியோர் ஆர,
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
15
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்

371. பாலை
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை,
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர்
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி,
குறு நெடுந் துணைய மறி புடை ஆட,
5
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது,
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்,
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்,
10
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து,
என்னஆம் கொல் தாமே 'தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்' என நசைஇ
வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்

395. பாலை
தண் கயம் பயந்த வண் காற் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன,
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண்
பனி வார் எவ்வம் தீர, இனி வரின்,
5
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர்
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்,
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை,
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி,
10
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு,
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல்
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்,
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து,
ஆடு கழை இரு வெதிர் நரலும்
15
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே!

பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்

399. பாலை
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி,
இமையக் கானம் நாறும் கூந்தல்,
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம்
பருகுவன்ன காதல் உள்ளமொடு,
5
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார்
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட,
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி,
10
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ,
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி,
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி,
15
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்,
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்,
வேய் கண் உடைந்த சிமைய,
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே.

தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்