பாடினோர் பகுதி
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

25. பாலை
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்,
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப்
பைந் தாது அணிந்த போது மலி எக்கர்,
5
வதுவை நாற்றம் புதுவது கஞல,
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில்
படு நா விளி யானடுநின்று, அல்கலும்
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண்,
10
சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர்
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன,
இகழுநர் இகழா இள நாள் அமையம்
செய்தோர் மன்ற குறி" என, நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
15
வாராமையின் புலந்த நெஞ்சமொடு,
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என,
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர் வாழி தோழி! பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
20
பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன்,
இன் இசை இயத்தின் கறங்கும்
கல்மிசை அருவிய காடு இறந்தோரே.

பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்