பாடினோர் பகுதி
ஒளவையார்

11. பாலை
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
5
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி,
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப்
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
10
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர,
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல ஆகி,
15
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே!

தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்'என்பது படச் சொல்லியது. - ஒளவையார்

147. பாலை
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
5
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென,
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
வெள்ளி வீதியைப் போல நன்றும்
10
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே!

செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஒளவையார்

273. பாலை
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின்,
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ,
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப,
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்,
5
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர்
அறியார்கொல்லோ, தாமே? அறியினும்,
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்,
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ?
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு
10
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி,
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை,
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி,
15
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம்
நில வரை எல்லாம் நிழற்றி,
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.

பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-ஒளவையார்

303. பாலை
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,
பேஎய் கண்ட கனவின், பல் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்,
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன்
5
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்,
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
புலம் கந்தாக இரவலர் செலினே,
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
10
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,
15
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்!
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன்
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து,
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்
20
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே.
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார்