பாடினோர் பகுதி
காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்

85. பாலை
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து,
5
ஆழல் வாழி, தோழி! 'சாரல்,
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
10
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்,
வருதும், யாம்' எனத் தேற்றிய
15
பருவம்காண் அது; பாயின்றால் மழையே.

தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்