பாடினோர் பகுதி

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

107. பாலை
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து,
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று
5
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்,
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
10
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து,
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
15
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்
மாலை இன் துணைஆகி, காலைப்
20
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப,
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.

தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

123. பாலை
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல,
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்
5
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
10
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை,
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங் கடல் ஓதம் போல,
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே.

தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக் கண்ணனார்

285. பாலை
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம்
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர்,
5
காடு தேர் மடப் பிணை அலற, கலையின்
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
10
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி,
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே, காதலர்;
15
வாராய் தோழி! முயங்குகம், பலவே.

உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்