பாடினோர் பகுதி

சேரமான் இளங்குட்டுவன்

153. பாலை
நோகோ யானே; நோதகும் உள்ளம்;
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி,
வெம்பும்மன், அளியள்தானே இனியே,
5
வன்கணாளன் மார்புஉற வளைஇ,
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு,
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின்,
10
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப்
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல்
வல்லுநள்கொல்லோ தானே எல்லி
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
15
மீனொடு பொலிந்த வானின் தோன்றி,
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின்
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர்
கை விடு சுடரின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?

மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது. - சேரமான் இளங்குட்டுவன்