பாடினோர் பகுதி

தங்கால் பொற்கொல்லனார்

108. குறிஞ்சி
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம்
வரைமுதல் சிதறிய வை போல், யானைப்
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
5
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப,
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி,
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும்
10
இருளிடைத் தமியன் வருதல் யாவதும்
அருளான் வாழி, தோழி! அல்கல்
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின்
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல்,
காயா மென் சினை தோய நீடிப்
15
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலைகிழவோனே.

தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்

355. பாலை
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்;
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை,
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
5
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்;
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்,
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்றுஆயின், ஆனாது
10
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி!
'யாமே எமியம் ஆக, நீயே
பொன் நயந்து அருள் இலையாகி,
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே.

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்