பாடினோர் பகுதி

பாண்டியன் ஏனாதிநெடுங்கண்ணனார்

373. பாலை
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர் எழுந்து,
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து,
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி,
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில்,
5
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று,
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர,
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப,
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு,
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்;
10
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை,
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி,
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா,
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து,
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி
15
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல்
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல,
துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே!

பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்