பாடினோர் பகுதி

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

56. மருதம்
நகை ஆகின்றே தோழி! நெருநல்
மணி கண்டன்ன துணி கயம் துளங்க,
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை,
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
5
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,
10
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு,
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று,
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற
15
என்னும் தன்னும் நோக்கி,
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.

பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

124. முல்லை
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து
சென்றீக' என்பஆயின், வேந்தனும்
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு
5
இன்றே புகுதல் வாய்வது; நன்றே.
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற,
பாசறை வருத்தம் வீட, நீயும்
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை,
10
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி,
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய,
காலை எய்த, கடவுமதி மாலை
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை
15
அரமிய வியலகத்து இயம்பும்
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே.

தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

230. நெய்தல்
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப்
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல்,
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,
5
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்!
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு,
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம்,
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின்,
10
தீதும் உண்டோ, மாதராய்?' என,
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர்
கை வல் பாகன் பையென இயக்க,
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில்
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி,
15
சிறிய இறைஞ்சினள், தலையே
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.

தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

254. முல்லை
'நரை விராவுற்ற நறு மென் கூந்தற்
செம் முது செவிலியர் பல பாராட்ட,
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ,
5
மனை உறை புறவின் செங் காற் சேவல்
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல,
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல,
10
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி,
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும்,
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப,
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய,
15
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான்
சொல்லிய அளவை, நீடாது, வல்லென,
தார் மணி மா அறிவுறாஅ,
20
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே!

வினை முற்றி வந்து எய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

272. குறிஞ்சி
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப்
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி,
5
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க,
தனியன் வந்து, பனி அலை முனியான்,
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகர,
10
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக்
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும்,
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு,
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி,
உருவச் செந் தினை நீரொடு தூஉய்,
15
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ!
என் ஆவது கொல்தானே பொன் என
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

302. குறிஞ்சி
சிலம்பில் போகிய செம் முக வாழை
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்,
5
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும்,
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதல் அம் தோழி!
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
10
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல்,
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என,
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச்
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை,
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு,
15
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே.

பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்