பாடினோர் பகுதி

மதுரைக் கணக்காயனார்

27. பாலை
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம் அழ,
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார்,
5
செல்ப" என்ப' என்போய்! நல்ல
மடவைமன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
10
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட,
15
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்
குருதியொடு துயல்வந்தன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?

செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைக்கணக்காயனார்

338. குறிஞ்சி
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறம் கெழு தானை அரசருள்ளும்,
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்,
5
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன்
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்,
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல்,
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
10
முயங்கல் இயையாதுஆயினும், என்றும்,
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
அகல் இருங் கானத்துக் கொல்லி போல,
15
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின்
அறாஅலியரோ, தூதே பொறாஅர்
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன்,
தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து,
20
வழங்கல் ஆனாப் பெருந் துறை
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!

அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார்

342. குறிஞ்சி
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
5
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
ஏவல் இளையர் தலைவன், மேவார்
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை,
10
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையரமகளிரின் அரியள்,
அவ் வரி அல்குல் அணையாக்காலே!

அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார்