பாடினோர் பகுதி

மதுரைப் புல்லங் கண்ணனார்

161. பாலை
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி;
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை,
5
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக்
கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு
10
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல்,
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல் வரல் இள முலை நனைய;
பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ.

பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே உணர்ந்தாள். நம் பெருமாட்டி' என்று, தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப் புல்லங்கண்ணனார்