பாடினோர் பகுதி

மதுரைப் போத்தனார்

75. பாலை
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
5
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல்,
10
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய்,
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும்
15
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என-
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்;
20
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி
ஆனா நோயை ஆக, யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ,
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?'

'பொருள்வயிற் பிரிவர்' என வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியார்'எனத் தோழி சொல்லியது. - மதுரைப்போத்தனார்