அகுதை

76. மருதம்
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க,
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை
5
அவை புகு பொருநர் பறையின், ஆனாது,
கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில்,
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்,
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என,
10
ஆதிமந்தி பேதுற்று இனைய,
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
அம் தண் காவிரி போல,
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே.

'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர்

96. மருதம்
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
5
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
10
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
15
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
களிறு கவர் கம்பலை போல,
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே.

தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ

113. பாலை
நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்,
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
5
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து,
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற,
நல்காது துறந்த காதலர், 'என்றும்
10
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
15
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல்
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர்
20
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி,
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
25
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு,
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!

தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கல்லாடனார்

208. குறிஞ்சி
யாம இரவின் நெடுங் கடை நின்று,
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
5
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு
10
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப்
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து,
உரு வினை நன்னன், அருளான், கரப்ப,
15
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்,
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல்
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல,
20
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,
நல்கினள், வாழியர், வந்தே ஓரி
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
கார் மலர் கடுப்ப நாறும்,
ஏர் நுண், ஓதி மாஅயோளே!

புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்