அதிகன்

142. குறிஞ்சி
இலமலர் அன்ன அம் செந் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த,
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல்
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம்
5
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழி,
10
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,
15
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர,
20
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப,
25
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்;
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்

162. குறிஞ்சி
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல,
கடல் கண்டன்ன மாக விசும்பின்
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க,
5
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி,
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள்,
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி,
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக;
10
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண்,
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல்,
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்,
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி,
15
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது,
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின்
20
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய,
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன்
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி,
நேர் கொள் நெடு வரைக் கவாஅன்
25
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே.

இரவுக் குறிக்கண் தலைமகளைத் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்

325. பாலை
அம்ம! வாழி, தோழி! காதலர்,
'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர்,
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும்
5
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது
இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி,
'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள்
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை,
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு,
10
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம்
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய,
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல்,
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்;
சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள்,
15
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ,
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது,
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை,
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை,
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
20
சோலை அத்தம் மாலைப் போகி,
ஒழியச் சென்றோர்மன்ற;
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே?

கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்