அன்னி மிஞிலி

196. மருதம்
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து,
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி,
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
5
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
விடியல் வைகறை இடூஉம் ஊர!
தொடுகலம்; குறுக வாரல் தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
10
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய,
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
அன்னிமிஞிலியின் இயலும்
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர்

262. குறிஞ்சி
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
5
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
10
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
15
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே.

இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்