உதியஞ் சேரல்

 
65. பாலை
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;
5
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
10
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி,
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர்
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
15
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி,
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள்,
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு
20
அரியவால்' என அழுங்கிய செலவே!

வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார்

 
168. குறிஞ்சி
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக,
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே;
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப!
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த
5
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து,
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்;
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன்
10
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப,
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண்
வாள் வரி வயப் புலி கல் முழை உரற,
கானவர் மடிந்த கங்குல்;
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே?

இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது. -கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

 
233. பாலை
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின்
அலர் முலை நனைய, அழாஅல் தோழி!
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம்
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென,
5
ஊன் இல் யானை உயங்கும் வேனில்,
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின்,
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல்
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல்
10
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு,
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ,
பொருள்வயின் நீடலோஇலர் நின்
15
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே.

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார்

 
258. குறிஞ்சி
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி,
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும், அன்னோட்
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்
5
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக்
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து
மாய இருள் அளை மாய் கல் போல,
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும்,
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ,
10
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி,
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப்
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக,
காமம் கைம்மிக உறுதர,
15
ஆனா அரு படர் தலைத்தந்தோயே!

அல்லகுறிப்பட்டுப் பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பரணர்