எவ்வி

 
115. பாலை
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
5
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய
10
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
15
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை,
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடாமையின், நீடியோரே.

பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

 
126. மருதம்
நின் வாய் செத்து நீ பல உள்ளி,
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
5
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர்
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
10
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
15
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச்
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
20
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
மின் நேர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்

 
266. மருதம்
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின்
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை,
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ,
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
5
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ,
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண்
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலையாகி,
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து,
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
10
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
15
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
20
திரு மணி விளக்கின் அலைவாய்ச்
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே!

பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. -பரணர்

 
366. மருதம்
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய
நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு அழித்து,
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி,
கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன்
5
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின்,
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர்
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇ,
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி,
இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு,
10
நரை மூதாளர் கை பிணி விடுத்து,
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன,
நலம் பெறு பணைத் தோள், நல் நுதல் அரிவையொடு,
மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை
15
நீ தற் பிழைத்தமை அறிந்து,
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே.

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்