சேரலர்

 
149. பாலை
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்,
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும்
5
அத்த நீள் இடைப் போகி, நன்றும்
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர்
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
10
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ,
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
15
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.

தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்

 
209. பாலை
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான்,
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
5
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என,
ஆழல் வாழி, தோழி! அவரே,
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
10
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
15
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி,
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார்