தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்

 
36. மருதம்
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
5
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
10
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
15
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
நார் அரி நறவின் எருமையூரன்,
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று
20
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!

தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர்

 
116. மருதம்
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
5
பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப்
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை
10
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே,
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து
அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,
மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
15
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.

தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர்

 
175. பாலை
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்,
5
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும்
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண்
தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து
வருதும்' என்றனர் அன்றே தோழி!
10
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன்
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
15
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்,
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு
மண் பயம் பூப்பப் பாஅய்,
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?

பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி சாத்தனார்.

 
209. பாலை
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான்,
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
5
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என,
ஆழல் வாழி, தோழி! அவரே,
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
10
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
15
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி,
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார்