பண்ணன்

 
54. முல்லை
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற்
காரும் ஆர்கலி தலையின்று. தேரும்
ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
5
வள் வாய் ஆழி உள் உறுபு உருள,
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி,
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
10
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர்
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க,
மனைமனைப் படரும் நனை நகு மாலை,
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
15
புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர்
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
வருகுவைஆயின், தருகுவென் பால்' என,
20
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி,
திதலை அல்குல் எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.

வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்

 
177. பாலை
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும்,
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப்
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண்
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து
5
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால்
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின்
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை,
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ,
10
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
வல்லே வருவர்போலும் வெண் வேல்
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
15
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
அணங்குடை வன முலைத் தாஅய நின்
20
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார்