பழையன்

 
44. முல்லை
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
5
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
10
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனானாகி, திண் தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
15
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!

வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார்

 
186. மருதம்
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை
5
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும்
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே,
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
10
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட,
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,
இன்னும் பிறள் வயினானே; மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,
15
மாரி அம்பின், மழைத்தோற் பழையன்
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின்
யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும்
20
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே.

தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது. -பரணர்

 
326. மருதம்
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி,
பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல்,
நல்லள் அம்ம, குறுமகள் செல்வர்
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
5
நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில்,
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன
நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து,
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல்
இழை அணி யானைச் சோழர் மறவன்
10
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை,
புனல் மலி புதவின், போஒர் கிழவோன்,
பழையன் ஓக்கிய வேல் போல்,
பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே!

தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர்