பாரி

 
78. குறிஞ்சி
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து,
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல்
5
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்,
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்,
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென
10
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர்
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என,
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும்,
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட!
15
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு,
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
20
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி,
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய,
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே?

களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார்

 
303. பாலை
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,
பேஎய் கண்ட கனவின், பல் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்,
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன்
5
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்,
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
புலம் கந்தாக இரவலர் செலினே,
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
10
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,
15
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்!
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன்
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து,
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்
20
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே.

தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார்