மத்தி

 
6. மருதம்
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
5
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,
10
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய,
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என,
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
15
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல!
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
20
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
இளமை சென்று தவத் தொல்லஃதே;
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர்

 
211. பாலை
கேளாய், எல்ல! தோழி! வாலிய
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
பறை கண்டன்ன பா அடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும்,
5
தண் மழை ஆலியின் தாஅய், உழவர்
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
10
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
15
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே.

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார்

 
226. மருதம்
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்;
நாண் இலை மன்ற யாணர் ஊர!
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை,
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
5
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக்
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்,
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான்,
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை,
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
10
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள்,
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
15
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,
போர் அடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.

தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர்