வான வரம்பன்

 
45. பாலை
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
5
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே, காதலர். மாமை,
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
10
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
15
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார்,
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல,
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!

வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்

 
359. பாலை
'பனி வார் உண்கணும், பசந்த தோளும்,
நனி பிறர் அறியச் சாஅய், நாளும்,
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்,
நீடினர்மன்னோ, காதலர்' என நீ
5
எவன் கையற்றனை? இகுளை! அவரே
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது,
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர்,
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு,
10
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்,
பொய்யா நல் இசை மா வண் புல்லி,
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள்
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை
15
அருவித் துவலையொடு மயங்கும்
பெரு வரை அத்தம் இயங்கியோரே!

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார்

 
389. பாலை
அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து,
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
5
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்,
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
எற் புறந்தந்து, நிற் பாராட்டி,
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார்,
10
மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து,
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட,
15
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல்
வான வரம்பன் நல் நாட்டு உம்பர்,
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல்,
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற,
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
20
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி,
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப,
படு மழை உருமின் முழங்கும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரனார்